நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா: திரளானோர் பங்கேற்பு

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலின் ஆடிப்பூர பெருந்திருவிழா நிகழ்வாக, பூரம் கழித்தல் நிகழ்ச்சி மற்றும் பீங்கான் ரத ஊர்வலம் ஆகியன சனிக்கிழமை நடைபெற்றது. 


நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலின் ஆடிப்பூர பெருந்திருவிழா நிகழ்வாக, பூரம் கழித்தல் நிகழ்ச்சி மற்றும் பீங்கான் ரத ஊர்வலம் ஆகியன சனிக்கிழமை நடைபெற்றது. 
தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற நாகை காயாரோகணசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில்,  சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாகவும்,  அம்பாளின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 
இத்தலத்து அம்பாள், திருமணத்துக்கு முந்தைய யவ்வன பருவத்தில் காட்சியளிப்பதாகவும், இத்தலம் அம்பாளின் ருது ஸ்தானமாகவும் குறிப்பிடப்படுவதால்,   இங்கு ஆடிப்பூரப் பெருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். 
இதன்படி, நீலாயதாட்சியம்மன் கோயில் ஆடிப்பூர பெருந்திருவிழா கடந்த ஜூலை 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.
ஆடிப்பூரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூரம் கழித்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,  காலை 11 மணிக்கு அம்பாள் வெள்ளை சாற்றி பிராகார வலம் வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றன. 
மாலை சுமார் 4 மணிக்கு அம்பாளுக்கான சீர் வரிசை ஊர்வலம் தொடங்கப்பட்டது. நாகை மலையீஸ்வரன் கோயிலிலிருந்து திரளான பெண்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், வளையல்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்களை  ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வாணவேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம்,  நாகை நீலா தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி வழியே நீலாயதாட்சியம்மன் கோயிலை அடைந்தது.
அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஐதீக முறைப்படி பூரம் கழித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு மங்களப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆடிப்பூரப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நீலாயதாட்சியம்மன் பீங்கான் ரத வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மாயூரநாதர் கோயிலில்...
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில், அபயாம்பிகை அம்பாளுக்கு மங்கள பொருள்களை வைத்து படையலிட்டு, சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
மயிலாடுதுறையில் சமயக்குரவர்களால் பாடல்பெற்ற அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில், அபயாம்பிகை அம்பாளுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முறத்தில், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வளையல் ஆகிய மங்கள பொருள்களை வைத்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், ஆடிப்பூர அம்மன் வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி ரதத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. 
இதில், கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன், தமிழ்நாடு மின்வாரிய உதவி பொறியாளர் கங்குலி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வளையல் அலங்காரம்...
ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மணக்குடி பொறையான், நல்லநாயகி அம்மன் கோயிலில், நல்லநாயகி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை, திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
இருதய கமலநாத சுவாமி கோயிலில்...
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை  நடைபெற்றது. மாழையொண் கண்ணி சமேத இருதய கமல நாத சுவாமி கோயிலில் உள்ள ஆடிப்பூர அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com