ஹஜ் பயணிகள் அலைக்கழிப்பு: எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

ஹஜ் பயணிகள்அலைக்கழிக்கப்படும் நிலையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய, மாநில

ஹஜ் பயணிகள்அலைக்கழிக்கப்படும் நிலையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய, மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய,  மாநில ஹஜ் கமிட்டிகளின் ஏற்பாட்டின்பேரில் நிகழாண்டில், தமிழகத்திலிருந்து 4,636 பேர் அரசு மூலம் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் செல்கின்றனர். இதற்காக ஒவ்வொரு பயணியிடமிருந்தும் ரூ2.85 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
ஹஜ் பயணிகளின் பயண ஏற்பாட்டை இலகுவாக்குவதற்காக தமிழ் ஹஜ் சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பின் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் மூலம் பயணிகளைத் தங்க வைத்தல், விமான நிலையம் அழைத்து செல்லுதல் போன்ற உதவிகள் இலவசமாக செய்யப்படுகின்றன. இதுபோன்ற சொசைட்டி மற்ற மாநிலங்களில் இல்லை.
இந்நிலையில், 2019 ஹஜ் ஏற்பாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு குறைபாடுகளால் ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இவை எல்லாம் ஏர் இந்தியா நிறுவனத்தின் குறைபாடுகளாக இருந்தாலும், அதை சரிசெய்ய வேண்டியது மத்திய, மாநில ஹஜ் கமிட்டிகளின் கடமை. 
பிற மாநிலங்களில் ஒன்று அல்லது இரண்டு விமானங்கள் செல்லும் நிலையில், நாள்தோறும் தமிழகத்திலிருந்து மட்டும்  கூடுதலாக விமானங்கள் செல்வதால் ஹஜ் பயணிகளைத் தங்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்திலிருந்து செல்லும் 16 விமானங்களில் 2 தவிர மற்ற அனைத்து விமானங்களும் நள்ளிரவு விமானங்களாகும். இதனால் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதியவர்கள் சுமார் 36 மணி  நேரம் கண் விழிக்கும் நிலை உள்ளது. அவர்களின் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகிறது. இதுகுறித்து, தமிழ் ஹஜ் சர்வீஸ் சொசைட்டி எழுத்துபூர்வமாக மத்திய ஹஜ் கமிட்டி கவனத்துக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கையில்லை.
ஹஜ் பயணம் செல்லும் பயணிகள் 3 நாள்களுக்கு முன்னதாகவே வரவழைக்கப்பட்டு, ஒரு நாள் பயண ஆவணங்களைப் பெறுதல், மறுநாள் பயணப் பெட்டிகளை ஒப்படைத்தல், 3-ஆம்  நாள் புறப்படுதல் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் செலவு அதிகமாகிறது. எனவே மேற்கொண்டு 2 அலுவலர்களை நியமித்து ஒரே நாளில் பயண ஆவணங்கள் மற்றும், பயணப் பெட்டிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இதுபோன்ற குறைபாடுகளுக்கு கண்டனத்தைத் தெரிவித்து கொள்வதுடன், ஏர் இந்தியா விமான சேவைக்குப் பதிலாக, வேறு விமான சேவையை ஹஜ் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com