மயிலாடுதுறை தனி மாவட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று

மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திங்கள்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக, மயிலாடுதுறை பகுதியில் விவசாயிகள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கோரிக்கை அணிவகுப்பு நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் மா. ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை கோட்ட மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் பண்ணை.டி. சொக்கலிங்கம், ராம. சிதம்பரம், மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராம. சேயோன், மயிலாடுதுறை பொதுத் தொழிலாளர்கள் சங்கச் செயலர் அப்பர். சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கையெழுத்து இயக்கம்....
பொறையாறு, ஆக. 5: பொறையார் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிடம் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மக்கள் மசோதா கட்சி சார்பில் தொடர் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பொறையார், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பொறையார் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பொதுமக்கள், வணிகர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  மக்கள் மசோதா கட்சி தலைவர் ஆர்.கே . ரூபன் தலைமையில் மாநில பொறியாளர் அணி செயலாளர் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் மதன்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் கவியரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com