சுடச்சுட

  

  40 ஆண்டுகளாக தொடரும் ஆபத்து பயணம் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?

  By அ.அன்புமணி  |   Published on : 15th August 2019 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், பெருங்கடம்பனூரில் சுமார் 40 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தெத்தி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  பெருங்கடம்பனூர் ஊராட்சியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இளங்கடம்பனூர், ஜீவா தெரு உள்ளிட்ட  பகுதிகள் இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளாகும்.
  பெருங்கடம்பனூரில், அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், ஊர்ப்புற நூலகம் உள்ளிட்டவைகள் உள்ளன.இந்நிலையில், இவ்வூர் வழியாகச் செல்லும் பாசன வாய்க்காலான தெத்தி வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளதால், பொதுமக்கள் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கிறது.
  பெருங்கடம்பனூரில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில்  ஜீவா தெரு பகுதியைச் சேர்ந்த  300-க்கும் மேற்பட்டே மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  இந்த மாணவர்கள் தெத்தி வாய்க்காலைக் கடந்தே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போது  அந்த வாய்க்காலில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் போடப்பட்டுள்ள கல் பாலம் மட்டுமே  உள்ளது.
  இந்தப் பாலத்தைக் கடக்கும்போது,  மாணவர்கள் சிலர் வாய்க்காலில் தவறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்தேறி வருவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
  இதேபோல், ஜீவா தெரு பகுதியைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைக்குச் செல்லமுடியவில்லை. அவசரக் காலங்களில்கூட கிராமத்தினுள் வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தால் உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கல் பாலம் உள்ள இடத்தில் சாலை மட்டுமே போடப்பட்டு வருவதாகவும், இதனால் எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை என்ற கருத்தையும் கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
  இதனால், கிராம மக்கள், மாணவர்களின் 40 ஆண்டுகால தொடர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தெத்தி வாய்க்காலின் குறுக்கேயுள்ள கல் பாலத்தை அகற்றிவிட்டு, வாகனங்கள் வந்து செல்லும் வகையில் புதிய பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கூறியது:
  பெருங்கடம்பனூர் - ஜீவா தெரு பகுதியை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என 40 ஆண்டுகளாக  கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பாலம் இல்லாத  நிலையில் மழைக் காலங்களில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது. பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் கல் பாலத்தை கடந்துதான் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். பாலம் அமைந்துள்ள இடத்தில் சாலை மட்டும் போடப்படுவதால் பயன்  ஏற்படப்போவதில்லை. புதிய பாலம்  கட்டினால் மட்டுமே போடப்படும் சாலையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
  பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் போதிய கட்டடங்கள் இல்லை. சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் சமூக விரோதச் செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில்,  பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்டக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
  பெருங்கடம்பனூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் என். செல்வக்குமார்: தெத்தி வாய்க்காலின் குறுக்கே உள்ள கல் பாலத்தை அகற்றிவிட்டு, வாகங்கள் வந்து செல்லக்கூடிய வகையில் பாலம் கட்டப்படவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கையில்லை. இதேபோல், தெத்தி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மற்ற 3 பாலங்களும் பலமிழந்து இடிந்து விடும் நிலையிலேயே உள்ளன.
  பள்ளி மாணவர்கள், கிராம மக்களின் நலன் கருதி மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னர் பாலங்களை சீரமைக்கவும், புதிதாக ஒரு பாலத்தைக் கட்டுவதற்கும் அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னர் இப்பணிகள் தொடங்கப்பட்டால், கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமச் சாலைகள், அங்காடி கட்டடம் ஆகியவற்றை சீரமைக்கவும் அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai