மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கை: வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக அறிவித்து

சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  வழக்குரைஞர் குழுவினர் புதன்கிழமை மனு அளித்தனர்.
வழக்குரைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் உள்ளிட்டோர் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயலெட்சுமியிடம் அளித்த மனு விவரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில், மயிலாடுதுறையை தமிழகத்தின் 36-ஆவது மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தர ஊராட்சி மன்றங்களின் தனி அலுவலர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறோம் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 
அப்போது, வழக்குரைஞர்கள் இரா.சுரேஷ், பெ.சிவதாஸ், க.புகழரசன், மு.விவேகானந்தன், பூ.அறிவொளி, ஆர்.வினோத், செள.சிவச்சந்திரன், வே.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
குத்தாலம், ஆக. 14: இதேபோல் குத்தாலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் ராம. சேயோன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சுதந்திர தினத்தன்று குத்தாலம் ஒன்றியத்தின் 51 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில், மயிலாடுதுறையை 36-ஆவது மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார். 
இதேபோல், சீர்காழி, கொள்ளிடம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com