குறுவை நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு: கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்

சீர்காழி பகுதி விவசாயிகள் குறுவை நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருவதால், உடனடியாக

சீர்காழி பகுதி விவசாயிகள் குறுவை நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருவதால், உடனடியாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
சீர்காழி வட்டத்தில் செம்மங்குடி, வினாயகக்குடி, வடகால், கடவாசல், எடமணல், பச்சைமாதானம், குளத்திங்கநல்லூர், மாதானம், நல்லூர், நல்லநாயகபுரம், ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, தண்டேசநல்லூர், ஆணைக்காரன்சத்திரம்,புத்தூர், எருக்கூர், கருக்குடி உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களில் ஆழ்துளை கிணறு மூலம் பல்வேறு சிரமங்களுக்கிடையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், குறுவை நெல்மணிகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி பல்வேறு பகுதிகளில் அறுவடை  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீர்காழி பகுதியில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகலில் மழை விட்டுள்ளபோது அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடை செய்த நெல்லை களத்துமேட்டில் கொட்டி வைத்து மூட்டையில் கொட்டுவதற்குள் பிற்பகலுக்கு மேல் மழை அதிகம் பெய்யத் தொடங்குவதால் அறுவடை செய்த நெல் நனைந்து விடுகிறது. 
அகணி, வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் ஆகிய பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை பருவத்துக்கு இதுவரை திறக்கவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் அவை மழையில் நனைந்து முளைக்கத் தொடங்குகிறது. எனவே, விவசாயிகளின் வேதனையை போக்க உடனடியாக சீர்காழி பகுதியில் குறுவை பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்.
இதுகுறித்து, விவசாயி கல்யாணம் கூறியது: கொண்டல், வள்ளுவக்குடி, பணங்காட்டாங்குடி, நிம்மேலி, அகணி போன்ற பகுதிகளில் ஏடிடி-43,45 மற்றும் ஐஆர்50 உள்ளிட்ட சன்னரகம் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள்  தீவிரமாக நடந்து வருகின்றன. பல இடங்களில் அறுவடை பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. பலக்கட்டபோராட்டத்துக்குப் பிறகு அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இப்பகுதியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கவில்லை. அரசு கொள்முதல் நிலையத்தில் 60 கிலோ மூட்டை ரூ. 1,100-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தனியார் வியாபாரிகளிடம் 63 கிலோ நெல் மூட்டை ரூ. 950 மட்டுமே விற்க முடிகிறது. நேரடி கொள்முதல் நிலையத்தில் 16 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் 20 சதவீதம் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com