மத்திய அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலர்

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும்,

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலருமான சஞ்சீவ்பட் ஜோஷி தெரிவித்தார். 
நாகை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம், மழைநீர் சேகரிப்பு, மரம் நடுதல், குளங்களை மேம்படுத்துதல், நீர் நிலைகளை சீரமைத்து, நிலத்தடி நீரை தேக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை  1-ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம், நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இந்த திட்டங்கள் குறித்து, மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் சஞ்சீவ்பட் ஜோஷி, மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், சஞ்சீவ்பட் ஜோஷி பேசியது: 
ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரித்தல், பாரம்பரிய குளங்கள் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல், மறு பயன்பாடு ஆழ்குழாய்க் கிணறுகளை மீள நிரப்பும் அமைப்பு உருவாக்குதல், ஆற்றுப்படுகை வளர்ச்சி, தீவிர காடு வளர்ப்பு போன்ற ஐந்து தலைப்புகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், மாநிலம் மற்றும் மாவட்டங்களை ஊரகத் தூய்மைக் கணக்கடுப்பு மூலம் தரவரிசைப்படுத்துதல் இயக்கம் "ஸ்வாட்ச் சர்வேக்ஷன் கிராமீன்-2019" என்ற பெயரில் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களின் கருத்துகளைப் பதிவு செய்திடும் வகையில் பல்வேறு வடிவிலான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
18 முதல் 70 வயதுடைய பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பிரதம மந்திரியின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.12 வீதம் பிரீமியம் செலுத்தினால், ரூ.2 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டுத் தொகையாக பெறலாம். பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 50 வயதுடையவர்கள் ஆண்டு பிரீமியம் ரூ.330 செலுத்தி, ரூ.2 லட்சம்  மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுத் தொகையும், அடல் பென்ஷன் திட்டத்தின்கீழ் 18 வயது முதல் 40 வயதுடையவர்கள் வங்கிக் கணக்கின் வாயிலான பிரீமியம் செலுத்தி, 60 வயதுக்குப்பின் மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறலாம். மத்திய அரசின் இத்திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.தியாகராஜன், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாணி, விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com