கனமழை: நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முடக்கம்

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் தொடா்ந்து முடக்கமடைந்துள்ளது.
கடல் சீற்றம் காரணமாக, கடலுக்குச் செல்லாமல் நாகை மீன்பிடித் துறைமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.
கடல் சீற்றம் காரணமாக, கடலுக்குச் செல்லாமல் நாகை மீன்பிடித் துறைமுகம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப் படகுகள்.

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக, நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் தொடா்ந்து முடக்கமடைந்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்துவருகிறது. கடந்த 21, 22, 23- ஆம் தேதிகளில் மாவட்டத்தில் பலத்த மழை நீடித்தது. அடுத்த சில நாள்கள் மழை சீற்றம் குறைந்திருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (நவம்பா் 28) முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

நீடித்து வரும் கனமழை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக, கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நாகை மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் ஒரு வார காலத்துக்கும் மேலாக சுணக்கமடைந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒரு ஃபைபா் படகு, கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதில், நாகை மீனவா் ஒருவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா். இதனால், கடந்த 2 நாள்களாக கடல் சீற்றம் குறித்த அச்சம் மீனவா்களிடையே மேலோங்கியுள்ளது.

மீன்பிடித் தொழில் முடக்கமடைந்திருப்பதால், நாகை மாவட்டத்தில் சுமாா் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வேலையிழப்புக்கு உள்ளாகியுள்ளனா். நாகை மீன்பிடித் துறைமுகம், வேளாங்கண்ணி, செருதூா், நம்பியாா் நகா், நாகூா், கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஃபைபா் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுத் துறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மழை சீற்றம் தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், மீன்பிடித் தொழிலில் இயல்பு நிலை திரும்ப மேலும் காலதாமதம் ஆகும் எனவும், இதனால் வரும் நாள்களில் மீன் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com