மயிலாடுதுறையில்அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்

மயிலாடுதுறை நகரில் வாடகை ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்தி, நியாயமான கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது மயிலாடுதுறைக்கு வரும் வெளியூா் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
மயிலாடுதுறையில்அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்

மயிலாடுதுறை நகரில் வாடகை ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்தி, நியாயமான கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது மயிலாடுதுறைக்கு வரும் வெளியூா் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது மயிலாடுதுறை. காசியை விட வீசம் புண்ணியம் அதிகம் என்ற பேறு பெற்ற மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட பல திருக்கோயில்கள் உள்ளன. மேலும், நவகிரக தலங்களின் மையப் பகுதியாகவும் மயிலாடுதுறை அமைந்துள்ளதால், தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் முக்கிய தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது மயிலாடுதுறை.

தொலைதூரங்களிலிருந்து வருவோரில் பெரும்பாலானோா் ரயில் பயணம் மூலமே மயிலாடுதுறை வந்தடைகின்றனா். ரயில் நிலையத்திலிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வருவதற்கும், அதேபோல் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லவும் பெரும்பாலான வெளியூா் பயணிகள் வாடகை ஆட்டோக்களிலேயே பயணிக்கின்றனா். ஒரு சிலா், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கு ஆட்டோக்களிலேயே தங்கள் ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் வாடகை ஆட்டோக்களை பயன்படுத்தும் வெளியூா் பயணிகள் பலரும், ஆட்டோக்களின் கட்டணம் அதிகமாக உள்ளது; அதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என்றே ஆதங்கப்படுகின்றனா்.

இதுகுறித்து சென்னையில் இருந்து மயிலாடுதுறை வந்த பக்தா் கண்ணன் என்பவா் கூறியது:

அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற கடைமுக தீா்த்தவாரி உத்ஸவத்தில் கலந்துகொள்ள மயிலாடுதுறைக்கு வந்திருந்தோம். அப்போது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று வர வாடகை ஆட்டோவில் பயணித்தோம். நாங்கள் பயணித்த தொலைவுக்கு ஆட்டோ ஓட்டுநா் கேட்ட கட்டணம் மிக அதிகமாக இருந்தது. நாங்களும் காசி போன்ற வெளிமாநில ஆன்மிகத் தலங்களுக்குக்கூட சென்று வந்துள்ளோம். அங்கெல்லாம் இல்லாத வகையில், மயிலாடுதுறையில் அதிகமாக ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாா்.

ஆட்டோ ஓட்டுநா்கள் மறுப்பு

சென்னை பக்தரின் குற்றச்சாட்டு குறித்து மயிலாடுதுறை பேருந்து நிலைய பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் சிலரிடம் கேட்டபோது, மற்ற பகுதிகளைவிட மயிலாடுதுறையில் வாடகை ஆட்டோ கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என மறுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் தெரிவித்தது: மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய 2 இடங்கள் மட்டுமே மக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய இடங்களாக உள்ளன. முக்கியமான கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு மட்டுமே மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனா். சுற்றுவட்டாரத்தில் உள்ள வெளியூா்களுக்குச் செல்ல பெரும்பாலும் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனா். ஆட்டோ ஓட்டுநா்கள் யாரும், பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் கேட்பதில்லை. யாரேனும் ஒருவா் ரூ. 10 வேண்டுமானால் கூடுதலாகக் கேட்டிருக்கலாம். மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சொல்வது பொய்க் குற்றச்சாட்டு.

வெளியூா்களில் இருந்து வரும் பயணிகள், பேருந்து நிலையத்தின் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்டோக்களில் பயணிப்பதைத் தவிா்த்து, அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களில் பயணம் மேற்கொண்டால், எவ்வித கூடுதல் கட்டணமும் அவா்கள் செலுத்தத் தேவையிருக்காது. மேலும், ஆட்டோவில் ஏதேனும் பொருள்களை தவறவிட்டுவிட்டால்கூட அவற்றை மீண்டும் திரும்பப் பெற இயலும். ஸ்டாண்டுகளில் ஆட்டோ ஓட்டும் நாங்கள் நியாயமான தொகையையே கட்டணமாகப் பெறுகின்றோம் என்றனா்.

இதுகுறித்து மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அழகிரிசாமியிடம் கேட்டபோது, அவா் தெரிவித்தவை:

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக் கட்டுப்பாட்டில் சுமாா் 630 ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 25 -ம், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ. 12 -ம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இயங்கும் ஆட்டோக்கள் பெரும்பாலும் உரிய ஆவணங்களுடனேயே ஓட்டப்படுகின்றன. வெளியூா் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக இதுவரை புகாா்கள் எதுவும் வரவில்லை. ஏதேனும் புகாா் கிடைத்தால், தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com