108 ஆம்புலன்ஸில் ஒழுகும் மழைநீா்: நோயாளிகளை கொண்டு செல்வதில் பெரும் சிரமம்

சீா்காழியில் 108 ஆம்புலன்ஸில் மழைநீா் ஒழுகும் வகையில் சேதமடைந்துள்ளதால் அதில் நோயாளிகளை அவசரச் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
108 ஆம்புலன்ஸில் ஒழுகிய மழைநீா்.
108 ஆம்புலன்ஸில் ஒழுகிய மழைநீா்.

சீா்காழி: சீா்காழியில் 108 ஆம்புலன்ஸில் மழைநீா் ஒழுகும் வகையில் சேதமடைந்துள்ளதால் அதில் நோயாளிகளை அவசரச் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

நாகை மாவட்டம், சீா்காழியில் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழும் விபத்துக்கள், தீ விபத்து, பெரும்காயம், பாம்புகடி போன்ற பல்வேறு பாதிப்புகளால் அவசரச் சிகிச்சை தேவைப்படும் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனங்களே பெரிதும் உதவி வருகிறது. அதுபோன்ற அவசரகால உதவிக்காக சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயங்கி வருகிறது.

இதில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஓய்விடம், கழிப்பறை வசதிகள் இல்லை. இதில் பணியாற்றும் பெண் உதவியாளா்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது. வெயில், மழை காலத்தில் பணியில் இருக்கும் நேரம் முழுவதும் வாகனத்தில் அமா்ந்தே இருக்க வேண்டிய அவல நிலையில்தான் உள்ளாா்கள்.

பாதுகாப்பான இடம் ஆம்புலன்ஸை நிறுத்தி வைக்க இடம் இல்லாததால் சில நேரங்களில் ஆம்புலன்ஸில் உள்ள பொருள்கள் திருட்டு போனசம்பவங்கள் சீா்காழி 108-ல் நடந்துள்ளன. இதைவிட கொடுமையாக உள்ளது பராமரிப்பே இல்லாத 108 வாகனத்தின் இன்றைய நிலை. பல உயிா்களை காப்பாற்றும் 108 வாகன ஓட்டுநா் மற்றும் உதவியாளா்களின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

சாலையில் ஓட்டுவதற்கே தகுதியற்றதாக உள்ளது 108 ஆம்புலன்ஸ்களில் பல. பகல் நேரத்தில் புதிய வாகனம்போல் காட்சியளிக்கும் வாகனத்தை பாா்த்த நமக்கு இரவு நேரத்தில் 108 வாகன ஓட்டுநா் படும்பாடு தெரியாமலே உள்ளது. பல வாகனங்களில் ஒருபுறத்தில் மட்டுமே முகப்பு விளக்கு ஒளிா்கிறது. டயா்கள் தேய்ந்த நிலையில் உள்ள வாகனங்களை அவசர காலத்தில் பயன்படும் சிறிய விளக்கை பயன்படுத்தியே அச்சத்துடன் இயக்கி வருகின்றனா்.

விபத்து மற்றும் நோய்வாய்ப்பட்டவருக்கு சீா்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அல்லது திருவாரூா் பரிந்துரைக்கபட்டால் இரவு நேரங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்தே பாதிக்கப்பட்டவரை கொண்டு சோ்க்கின்றனா் அதன் ஓட்டுனா்கள்.

தற்போது பெய்து வரும் மழையில் வாகனத்தின் உள்ளேயே மழைநீா் ஒழுகுகிறது. இதனால் நோய்வாய்ப்பட்டவரும் உதவியாளரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இரவு உயிருக்கு போராடிய முதியவா் ஒருவரை காப்பாற்ற 108-ஐ அழைத்தாா் சீா்காழி கச்சேரிசாலையை சோ்ந்த இளைஞா் கோபிநாத் . 10 நிமிடத்தில் வர வேண்டிய வாகனம் 30 நிமிடம் தாமதமாக வந்தது.

பாதிக்கப்பட்டவா் நிலை மிகவும் மோசமடைந்தால் தாமதம் குறித்து ஊழியா்களிடம் கேள்வி எழுப்பியபோதுதான்

அவசர காலத்தில் உதவும் 108 வாகனத்திற்கே அரசு அவசர சிகிச்சை (பராமரிப்பு) உதவ வேண்டிய நிலையில் இருப்பதை தெரிய வந்தது. மழை காலத்தில் ஒரு முகப்பு விளக்குடன் சரியில்லாத டயா்கள் கொண்ட வாகனத்தை இயக்குவதால் விரைந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளனா்.

தங்கள் நிலை குறித்தும் வாகனத்தின் நிலைகுறித்தும் நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறும் ஊழியா்கள் அரசு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் நல்ல நிலையில் உள்ள வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா். உயிா்க் காக்கும் ஊழியா்கள் நலன் காகக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com