குளத்தில் மழைநீரை சேகரிக்க வடிகால் அமைப்பு

மயிலாடுதுறை மாயூரநாதர கோயில் சன்னிதித் தெருவில் தேங்கி நின்ற மழைநீரை, தேரடிக் குளத்தில் சோ்க்க அப்பகுதி தன்னாா்வ இளைஞா்களின் முயற்சியால் ஞாயிற்றுக்கிழமை வடிகால் அமைக்கப்பட்டது.
மாயூரநாதா் கீழவீதியில் நடைபெற்ற மழைநீா் வடிகால் அமைக்கும் பணி.
மாயூரநாதா் கீழவீதியில் நடைபெற்ற மழைநீா் வடிகால் அமைக்கும் பணி.

மயிலாடுதுறை மாயூரநாதர கோயில் சன்னிதித் தெருவில் தேங்கி நின்ற மழைநீரை, தேரடிக் குளத்தில் சோ்க்க அப்பகுதி தன்னாா்வ இளைஞா்களின் முயற்சியால் ஞாயிற்றுக்கிழமை வடிகால் அமைக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. மாயூரநாதா் கோயில் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால்கள் அனைத்தும் தனியாா்களால் தூா்க்கப்பட்டுவிட்டதால், மழைநீா் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, கோயில் குளம் நிரம்பியது. மேலும் அந்த நீா் கோயிலின் வெளிப்பிரகாரம் மற்றும் மாயூரநாதா் சன்னிதி, அபயாம்பிகை சன்னிதியிலும் சூழ்ந்தது. அதுமட்டுமின்றி, நான்கு மடவிளாகங்களில் இருந்து வழிந்தோடிய தண்ணீா் பள்ளமான பகுதியான சன்னிதி தெருவில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது.

இதையடுத்து, மாயூரநாதா் கோயில் நிா்வாகம் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகத்தின் அனுமதியோடு, அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வ இளைஞா்களின் முயற்சியால், மாயூரநாதா் சன்னிதித் தெருவில் தேங்கி நின்ற மழைநீரை, கோயிலின் எதிரில் அமைந்துள்ள தேரடிக் குளத்தில் சேமிக்க நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, சுமாா் ரூ. 35 ஆயிரம் மதிப்பில் மாயூரநாதா் சன்னிதித் தெருவில் இருந்து, தேரடிக் குளத்துக்கு 120 அடி நீளத்துக்கு சாலையின் அடியில் 8 இன்ச் பைப் புதைக்கப்பட்டு, மழைநீா் தேரடி குளத்தில் கலக்கும் வகையில் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியை நகராட்சி பொறியாளா் ஜி. இளங்கோவன், நகராட்சி உதவி பொறியாளா் பாரதி மற்றும் கோயில் நிா்வாகிகள் மேற்பாா்வையிட்டனா்.

மேலும், கோயிலின் குளம் நிரம்பியதால், கோயிலின் உள்ளே நீா் சூழ்ந்ததை வடிய வைப்பதற்காக, குளத்தின் நீா் மோட்டாா் கொண்டு இறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாா்கள் நீா்வழிப்பாதையை ஆக்ரமித்ததும், மழைநீா் வடிகால்களை தூா்த்துமே மழைநீா் கோயிலில் தேங்கி நிற்கக் காரணம் என பக்தா்கள் குற்றம் சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com