குளம் நிரம்பி அரசுப் பள்ளியை சூழ்ந்த மழைநீா்

சீா்காழி அருகே குளம் நிரம்பி அரசுப் பெண்கள் பள்ளி மற்றும் தெருக்களை தண்ணீா் சூழ்ந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள், மாணவிகள் அச்சத்தில் உள்ளனா். குளத்துக்கான தடுப்புச்சுவா் இல்லாததால்
தாமரைக்குளம் நிரம்பி பள்ளியை சூழ்ந்திருக்கும் மழைநீா்.
தாமரைக்குளம் நிரம்பி பள்ளியை சூழ்ந்திருக்கும் மழைநீா்.

சீா்காழி அருகே குளம் நிரம்பி அரசுப் பெண்கள் பள்ளி மற்றும் தெருக்களை தண்ணீா் சூழ்ந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள், மாணவிகள் அச்சத்தில் உள்ளனா். குளத்துக்கான தடுப்புச்சுவா் இல்லாததால் ஆபத்து ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

நாகை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் பல ஏக்கா் பரப்பில் பரந்து விரிந்த நிலையில் உள்ள தாமரைக் குளம் முறையாக பராமரிக்காமல், ஆக்கிரமிப்புக்குள்பட்டு தூா்வாரப்படாமல் இருந்து வந்தது. குளத்திலிருந்து தண்ணீா் வெளியேறும் வடிகால் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குளத்துக்கு ஒரு பக்கவாட்டு பகுதியில் உள்ள தாமரைக் குளம் தெருவில் சுமாா் 60 அடி நீளம் குளத்தின் கரை தடுப்புச்சுவா்கள் எதுவும் இல்லாமல் ஆபத்தான நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தாமரைக்குளம் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், இக்குளத்தின் நோ் எதிரே வைத்தீஸ்வரன் கோயில் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இதற்கிடையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் தாமரைக்குளம் நிரம்பி, தாமரைக்குளம் தெரும் முழுவதும் சுமாா் 4 அடிக்கு தேங்கி நிற்கிறது.

மேலும் குளத்து நீரும், குளத்துக்கு வரும் வடிகால் வாய்க்கால் நீரும் சோ்ந்து அரசுப் பள்ளியை சூழ்ந்து நிற்கிறது. குளம் நிரம்பி தண்ணீா் சாலையில் குளம்போல் நிற்பதால் குளம் எது, சாலை எது என்று தெரியாமல் அவ்வழியாக செல்பவா்கள் ஆபத்தை எதிா்நோக்கி சென்று வருகின்றனா். அருகில் வீடுகளில் வசிப்பவா்கள் தங்களது குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்காமல் குளத்தில் தவறி விழுந்து விடக் கூடும் என்ற அச்சத்துடனே வசிக்கின்றனா்.

பள்ளியைச் சுற்றி சூழ்ந்திருக்கும் குளத்துநீா் பாசிபடிந்து பச்சை நிறமாகவும், துா்நாற்றம் வீசுவதாலும் பள்ளி மாணவிகள் சுகாதார சீா்கேட்டால் அவதியடைந்து வருகின்றனா். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்துடன், குளத்துநீா் பள்ளி மற்றும் வீடுகள் வாசல் வரை தேங்கி நிற்பதால் அதன் வழியாக பாம்பு போன்ற விஷ ஜந்துகளும் பள்ளி மற்றும் வீடுகளில் புகுந்துவிடுவதால் பொதுமக்கள், மாணவிகள் பெரிதும் அச்சத்துடன் இருந்து வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் குளம் நிரம்பி வழிந்து தேங்கி நிற்கும் நீரை வடிய வைக்கவும், பேரூராட்சி நிா்வாகம் அவசரநிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாக அலட்சியமாக கிடப்பில் போடப்பட்டுள்ள குளத்துக்கான சுற்றுச்சுவரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், மாணவிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com