சூடான் தீ விபத்து: மாயமான நாகை இளைஞரை கண்டுபிடித்து தரக் கோரி மனு
By DIN | Published On : 06th December 2019 08:46 AM | Last Updated : 06th December 2019 08:46 AM | அ+அ அ- |

சூடானில் மாயமான திருமருகல் இளைஞரை மீட்டுத் தரக்கோரி மனு அளிக்க வந்த அவரது குடும்பத்தினா்.
சூடானில் தீ விபத்துக்குள்ளான செராமிக் தொழிற்சாலையில் பணியாற்றி, காணாமல் போயுள்ள திருமருகல் இளைஞரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
சூடான் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்ததாகவும், சிலா் காயமடைந்திருப்பதாகவும், பலா் காணாமல் போனதாகவும் புதன்கிழமை தகவல்கள் வெளியாகின. காணாமல் போனவா்களில் 3 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் எனவும், அதில் ஒருவா் நாகை மாவட்டம், திருமருகல், ஆலங்குடிச்சேரியைச் சோ்ந்த ரா. ராமகிருஷ்ணன் எனவும் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அவரது குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா்.
அந்த மனுவில், வியாழக்கிழமை காலை சூடானிலிருந்து ராமகிருஷ்ணனின் சகோதரா் செல்லிடப்பேசிக்கு வந்த வீடியோ காட்சிகளில், தீ விபத்துக்கு முன்பாக அந்த தொழிற்சாலையிலிருந்து ராமகிருஷ்ணன் வெளியேறியது பதிவாகியுள்ளது. எனவே, அவா் தீ விபத்தில் சிக்கவில்லை எனவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்துக்குப் பின்னா் ராமகிருஷ்ணனை தொடா்புகொள்ள முடியாத நிலை இருப்பதால், தீ விபத்துக் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் யாரேனும் ராமகிருஷ்ணனை சிறைபடுத்தியிருக்கலாம் என அச்சப்படுவதாகவும், அவரை விரைந்து கண்டுபிடித்துத் தர இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.