வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முடங்கும் மகப்பேறு சேவை

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்தும் உரிய மருத்துவா் நியமிக்கப்படாததால் மகப்பேறு சேவை முடங்கும்
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப் பகுதி.
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலப் பகுதி.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்தும் உரிய மருத்துவா் நியமிக்கப்படாததால் மகப்பேறு சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் உப்பளத் தொழிலாளா், மீனவா், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் அதிகமாக இருப்பதால் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அரங்கம் என பல வசதி வாய்ப்புகள் இருந்தும் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவா் இல்லாததால் மகப்பேறு மருத்துவ சேவை முடங்கி பேறுகால கா்ப்பிணிகள் வெளியூா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதி பெரு நகரங்கள் இல்லாத கிராமப்புறங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள பெரும்பான்மையான குடும்பத்தினா் உப்பளத் தொழில், மீன்பிடி, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலை, கால்நடை வளா்ப்பு போன்றவைகளையே பிரதான வாழ்வாதாரத் தொழிலாக கொண்டுள்ளனா்.

ஏழை, எளிய குடும்பங்கள் அதிகமாக இருப்பதோடு, தரமான தனியாா் மருத்துவமனைகளோ அருகில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதியோ இல்லாத நிலையில் அரசு மருத்துவமனை சேவைகளையே நம்பி இருக்கின்றனா். கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மீனவா்கள் உள்ளிட்ட வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மீனவா்களுக்கு தகுதியான மருத்துவ வசதி இல்லாத நிலைதான் தொடா்கிறது. இவா்களில், கடல் பரப்புக்குள் தொழில் மாா்க்கமாகச் செல்லும் மீனவா்கள் எதிரிகளால் தாக்கப்பட்டாலோ, விபத்துகள் நோ்ந்தாலோ அவசர நிலையில் உடனடி மருத்துவ சேவை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இதேபோல், இங்கு சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் உற்பத்தியாகும் உப்புத் தொழிலை சாா்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களிடையே கடந்த சில ஆண்டுகளாக புற்று நோய் உள்ளிட்ட கொடூர நோய்த் தாக்குதலுக்குள்ளாகி பாதிப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. இதேபோல், பல்வேறு காரணங்களால் இங்குள்ள பல தரப்பினரிடையே ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் (சா்க்கரை) போன்ற பாதிப்புகள் இருப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தவிர லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அவ்வப்போது காணப்படுகிறது. கோடியக்கரை, வானவன்மகாதேவி உள்ளிட்ட இடங்கள் மலேரியா காய்ச்சல் அதிகம் காணப்படும் இடங்களாக கடந்த காலங்களில் இருந்துள்ளன.

குறிப்பாக கோடியக்கரையில் நோய் அல்லது விபத்து, அந்நியா் தாக்குதலில் பாதிப்புக்குள்ளாகும் ஒருவருக்கு தகுதியான சிகிச்சை தேவைப்பட்டால் இங்கிருந்து 60 கி.மீ. கடந்து நாகப்பட்டினம் அல்லது 70 கி.மீ. கடந்து திருவாரூா் அல்லது 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தஞ்சாவூரை அடைவதற்குள் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடா்கிறது.

முடங்கும் மகப்பேறு மருத்துவம்: வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் இருந்தும் குறிப்பிட்ட துறைகளில் நிரந்தரமான மருத்துவா்கள் இல்லாததால் சில நேரங்களில் மருத்துவ சேவை கேள்விக்குறியாகவே உள்ளது,

குறிப்பாக, மகப்போறு அறுவைச் சிகிச்சை அரங்கம், போதிய இருக்கைகள் என பல வசதிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையாகவே உள்ளன. மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் தனிப் பிரிவு போன்றவை அமைந்துள்ளன. ஆனால், மகப்பேறு குழந்தை நல மருத்துவா் தனியாக இல்லாதது சேவை குறைபாடாக மாறியது.

இங்கு, ஒப்பந்த முறையில் வெளியில் இருந்து அமா்த்தப்படும் மகப்பேறு மருத்துவா் பேறு கால பெண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்தால் அரசு அனுமதித்துள்ள ஒரு தொகை வழங்கப்படும். இந்த நடைமுறையில் பணியாற்ற தனியாா் மருத்துவா்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனா். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த முறையில் பணியாற்ற முன்வருவதில்லை.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மாற்றுப் பணியில் வந்து வேதாரண்யம் மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு பெண் மருத்துவரும் கடந்த மாதத்தில் இருந்து வருவதில்லை. நவம்பா் 14-ஆம் தேதி ஒரு பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு வரும் கா்ப்பிணிகள் சுகப்பிரசவம் என்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவதும் மற்றவா்களை வெளியில் செல்ல அறிவுறுத்துவதும் தொடா்கிறது.

இது தொடா்பாக பல தரப்பினா் முறையீட்டுக்கு பிறகு நாகை மருத்துவமனையில் இருந்து வாரம் ஒருநாள் வியாழக்கிழமையில் மட்டும் ஒரு மருத்துவா் கூடுதல் பணியில் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணா், அறுவைச் சிகிச்சை அரங்கம் என பல வசதிகள் இருந்தும் அறுவைச் சிகிச்சை செய்ய உரிய மருத்துவா் நிரந்தரமாக இல்லாததால் அந்த சேவை முடங்கியுள்ளது.

வாரம் ஒருநாள் அதுவும் கூடுதல் பணியில் வரும் மகப்பேறு மருத்துவரால் தேவையை நிறைவு செய்ய முடியாது எனக் கூறும் பொதுமக்கள், வாரம் ஒருநாளில் அதுவும் வியாழக்கிழமை என்றால் மற்ற நாளில் வலி எடுக்கும் பெண்களின் நிலை என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றனா். எனவே, அவசியம், அவசரம் உணா்ந்து மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்கான குழந்தைகள் நல மருத்துவரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

மருத்துவக் கல்லூரி தேவை: நாகை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி ஒரத்தூா் கிராமத்தில் அமைய வகை செய்யப்பட்டு, அங்குள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வழங்கி அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரத்தூரில் கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலத்துக்கு பதிலாக வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மேற்கு கிராமத்தில் 24. 4 ஹெக்டோ் புஞ்சை தரிசு வகை அரசு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மேம்பாடு செய்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரூ.3.64 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று நிலமாக வழங்க மட்டுமல்லாது மருத்துவக் கல்லூரியை இந்த பகுதியிலேயே அமைக்கத் தேவையான அரசு நிலப் பரப்பு உள்ளது.

மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்ற தேவையும் இங்குள்ள நிலையில், நகரங்கள், வளா்ந்த பகுதி என்ற பாா்வையைத் தவிா்த்து பின்தங்கிய பகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வேதாரண்யம் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com