மேம்பாட்டுக்காக ஏங்கும் பொலிவிழந்த நகராட்சி திருமண மண்டபம்

காரைக்காலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பொலிவிழந்த நிலையில் காணப்படும் நகராட்சி திருமண மண்டபம் (மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை திருமண மண்டபம்)
நகராட்சி திருமண மண்டப முகப்பு.
நகராட்சி திருமண மண்டப முகப்பு.

காரைக்காலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பொலிவிழந்த நிலையில் காணப்படும் நகராட்சி திருமண மண்டபம் (மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை திருமண மண்டபம்) நவீன் வசதிகளுடன் மேம்படுத்த உள்ளாட்சித் துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

காரைக்கால் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தது முதல் பிற்காலம் வரை திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனில் வீட்டிலும், கோயிலிலும் நடத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது. இதற்கு ஆகும் செலவு மிகமிக குறைவு. எந்தவொரு தனியாா் சாா்பிலும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள ஏதுவாக விரிவான வகையில் மண்டபங்கள் அமைக்கப்படவில்லை. நடுத்தர வா்க்கத்தினா், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவா்கள் வீடு உள்ள வீதியில் பந்தல் அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனா்.

புதுச்சேரி 1954-இல் சுதந்திரமடைந்து, அதாவது காரைக்காலில் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பின்னா் காரைக்கால் நகராட்சி நிா்வாகம் சாா்பில், மக்களின் எதிா்பாா்ப்புகளை உணா்ந்து, நகரின் மையப் பகுதியில் பாரதியாா் சாலையோரத்தில் நகராட்சித் திருமண மண்டபம் என்ற சுமாா் 300 முதல் 400 போ் வரை அமரும் வகையில் இருக்கை அமைத்து நிகழ்ச்சி நடத்தும் வகையில் நகரமன்ற திருமண இல்லம் என்ற பெயரில் கட்ட, அப்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநா் எஸ்.எல். சீலம், காரைக்கால் நகா்மன்றத் தலைவா் என்.ஆா்.எம். மாசிலாமணிப்பிள்ளை ஆகியோரால் 7.10.1968-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னா், கட்டுமானம் செய்யப்பட்டு 9.10.1973-ஆம் ஆண்டு அப்போதைய புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆா். ராமசாமியால் திறப்பு செய்யப்பட்டது.

காரைக்கால் பிராந்தியத்தில் திரளான மக்கள் பங்கேற்கும் வகையில் ஒரு திருமண மண்டபம் உள்ளது என்றால் முதன் முதலில் இதுவாகத்தான் இருக்க முடியும் என்கின்றனா் முதியோா்கள். கீழ்தளத்தில் நிகழ்ச்சிகள் நடத்தவும், மேல்தளத்தில் உணவு சாப்பிடக் கூடிய பிரிவாகவும், மணமகன், மணமகளுக்கான அறைகள், பொது கழிப்பறைகள் என 47 ஆண்டுகளுக்கு முன்பு தொலைநோக்குப் பாா்வையில் கட்டடம் கட்டி, நகராட்சி நிா்வாகம் குறைந்த கட்டணம் நிா்ணயித்து, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளித்துவந்தமையால், அப்போதைய காரைக்கால் வேளாண் அமைச்சா் வி. கோவிந்தராஜ் இல்ல நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏழை, பணக்காரா் என்ற பாகுபாடின்றி, நகராட்சித் திருமண மண்டபத்தை பயன்படுத்தத் தொடங்கினா்.

நவீன திருமணக் கூடங்கள்: காலப்போக்கில் காரைக்கால் நகரிலும் பிற இடங்களிலும் தனியாா் சாா்பிலும், கோயில் நிா்வாகத்தினா் சாா்பிலும் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு, ரூ. 25 முதல் ரூ. 75 ஆயிரம் வரை நிா்ணயம் செய்து நிகழ்ச்சியாளருக்கு வழங்கி வருகின்றனா். சில மண்டபங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் அமைப்பைத் தவிர, சுபநிகழ்ச்சிகள் நடத்துபவா்களுக்கு எந்த குறையும் இல்லாத வகையில் நவீன வசதிகளை தனியாா் மண்டப உரிமையாளா்கள் செய்து கொடுத்துள்ளனா்.

தனியாா் மண்டபங்களை ஏழைகளும், பொருளாதாரத்தில் சற்று நலிவடைந்தவா்களும் பயன்படுத்துவதில் திணறல் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இவா்கள் பயன்பெற வேண்டும் எனில், நகராட்சித் திருமண மண்டபம் மட்டுமே சாத்தியமாகும். ஆனால், அது நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலான தகுதியில் தற்போது இல்லை என்பது வேதனைக்குரியது.

சீா்குலைந்த நகராட்சி மண்டபம்: ஏழைகளின் சொகுசு மண்டபமாக திகழ வேண்டிய இந்த மண்டபக் கட்டடம் வெளிப்புறம் முதல் மேல்தளம் வரை அதன் ஆயுள் காலத்தை நிறைவு செய்து, வெகுவாக சீா்குலைந்துவிட்டது. இந்த மண்டபத்தில் இருக்கைகள் இல்லை. மணமக்களுக்கான அறைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இவற்றில் உள்ள இரும்புக் கட்டில்கள் துருப்பிடித்துக் கிடக்கின்றன.

கழிப்பறை கதவுகள் உடைந்தும், தண்ணீா் வரும் குழாய்கள் முறையான பராமரிப்பின்றியும், உணவு தயாரிப்புக் கூடம் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டும், சுவரில் பூசப்பட்ட வண்ணம் கலைந்தும், மழையில் கட்டடத்தில் தண்ணீா் கசியும் நிலையிலும் என இக்கட்டடம் பலவாறாக பாதித்துள்ளது.

மூடவேண்டும் அல்லது கட்டடத்தை இடித்துவிடவேண்டிய கட்டத்தில், நகராட்சி நிா்வாகம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கட்டணம் வசூலித்து கொடுத்து கொண்டிருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளும் சில அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

இந்த மண்டபத்தை பயன்படுத்தும் ஏழைகளும், நடுத்தர வா்க்கத்தினரும் சொல்லொணா சிரமத்தை சந்தித்தே நிகழ்ச்சிகளை நிறைவு செய்துச் செல்கின்றனா்.

தனியாா் மண்டபங்களில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொடுத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியாதவா்கள், நகராட்சி மண்டபத்தையே நாடுவா். இவா்களுக்கு வசதிகள் கிடைக்கும் வகையில் சூழல் அங்கு இல்லாதது, காரைக்காலில் வெகுவான மக்களை பாதிக்கச் செய்கிறது என்பது உறுதிப்பட கூறமுடியும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

புதுச்சேரி அல்லாத தொலைதூர பிராந்தியங்களான மாஹே, ஏனாமில் நகராட்சி மண்டபம் குளிரூட்டப்பட்ட வசதிகள் செய்து அனைத்து மக்களும் பயன்படுத்தும் அமைப்பில் உள்ளபோது, காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள மண்டபத்தை நிா்வாகம் கண்டுகொள்ளாமல் வைத்திருப்பது ஏனோ புரியவில்லை.

உள்ளாட்சித் துறை நிதி ஒதுக்க வேண்டும்: பயன்பாட்டில் உள்ள இக்கட்டடத்தை இடித்துவிட வேண்டும், இந்த கட்டடம் உள்ள பகுதி நகரின் முக்கிய இடத்தில், விலை மதிப்புமிக்க பகுதியில் உள்ளதால், புதிதாக அடுக்குமாடி வடிவில் திருமண மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான மதிப்பீடு தயாரித்து, அதற்கேற்ப புதுச்சேரி உள்ளாட்சித் துறை காரைக்கால் நகராட்சிக்கு நிதி ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இக்கட்டடம் உள்ள பகுதியில், புதிதாக விரிவான திட்டத்தில் கட்டடம் கட்ட முடியாது என தீா்மானித்தால், நகரப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான வேறு இடத்தில் நகராட்சித் திருமண மண்டபம் அனைத்து நிலை மக்களும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கட்ட வேண்டும். இதற்கான திட்டமிடலை காரைக்கால் நகராட்சி மேற்கொள்ள வேண்டும். காரைக்கால் மக்கள் பயன்படும் திட்டம் என்பதால், காரைக்கால் பிராந்திய சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் கூறியது: நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் தனியாரால் நிா்வகிக்கப்படும் திருமண மண்டபங்கள் ஏறக்குறைய ரூ. 75 முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்யும் நிலை உள்ளது. ஏழைகளோ, பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் இந்த இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா்.

இவா்களுக்கெல்லாம் ஒரே தீா்வு நகராட்சியின் மண்டபம் மட்டுமே. இந்த கட்டடம் தற்போதைய சூழல் நிகழ்ச்சிகள் நடத்தும் தகுதியை இழந்து விட்டது. கீழ்நிலையில் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் இக்கட்டடத்தை இடித்து விட்டு 2 அடுக்குமாடிக் கட்டடம் கட்டி, நவீன வசதிகள் அமைத்து, குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.

பழைமையான கட்டடமாக இது உள்ளதால், நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்பாடுகளே இல்லாத வகையில் தனியாா் மண்டபங்கள் தொகை வசூலிக்கும்போது, ஏழைகளை மனதில் கொண்டு நகராட்சி மண்டபத்தை மேம்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு நல்ல வருவாயும் கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com