எட்டுக்குடி அருகேஓடையில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் சாவு
By DIN | Published On : 02nd February 2019 12:59 AM | Last Updated : 02nd February 2019 12:59 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், எட்டுக்குடி அருகே சாலையோர ஓடையில் வியாழக்கிழமை இரவு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், எட்டுக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் கே. கண்ணன் (45). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் தி. சுரேந்திரன்(20), எஸ். தினேஷ் என்ற ராஜேஷ்(35), எட்டுக்குடி பிடாரி கோயில் தெருவைச் சேர்ந்த ஆர். குருமூர்த்தி (34) ஆகிய 4 பேரும் வியாழக்கிழமை இரவு ஒரு காரில் எட்டுக்குடியிலிருந்து தலைஞாயிறு நோக்கிப் பயணித்துள்ளனர். ராஜேஷ் காரை ஓட்டிவந்தார்.
திருக்குவளை காவல் சரகம், எட்டுக்குடி- சீராவட்டம் சாலையில், எட்டுக்குடி துரைராஜ் ஓடை அருகே சென்ற போது, கார் நிலை தடுமாறி ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சுரேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சைக்காக திருவாரூர் கொண்டு செல்லும் வழியில் குருமூர்த்தி உயிரிழந்தார். காயமடைந்த கண்ணன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராஜேஷ் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, திருக்குவளை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.