தென்னங்கன்று நடவுப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்
By DIN | Published On : 02nd February 2019 04:37 AM | Last Updated : 02nd February 2019 04:37 AM | அ+அ அ- |

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை வழங்கி, நடவுப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புத் திட்ட இயக்குநர் டி. ஜெகநாதன் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற, கஜா புயல் சேத மறுசீரமைப்புப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் விரைவில் கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, தென்னங்கன்றுகளை வழங்கி நடவுப் பணிகளை அலுவலர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
அதேபோல், புயலால் சேதமடைந்த மரங்களை அகற்ற வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் அளிக்கப்படுவது குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் பணிகளைத் தொடர்புடையத் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் டி. ஜெகநாதன்.
மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கஜா புயல் சீரமைப்புத் திட்டப் பணிகள் கூடுதல் திட்ட இயக்குநர் பிரதீப்குமார், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.