நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 02nd February 2019 04:36 AM | Last Updated : 02nd February 2019 04:36 AM | அ+அ அ- |

கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கல் பணிகளில் பங்கேற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் நாகை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ். பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
மாவட்டத் துணைத் தலைவர் பி. குமார், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் கே. ஆடியபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என். சுரேஷ்கண்ணா, பொறுப்பாளர் கே. தங்கராசு ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை இயந்திரங்களை பழுது நீக்கம் செய்து வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், முழு ஒதுக்கீட்டில் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி வழங்க வேண்டும். கூடுதல் பணி சுமையுடன், கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்புத் தொகுப்பு வழங்கல் பணிகளில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்குக் கூட்டுறவுத் துறை நிர்வாகம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.