ரயில்வே சுகாதார மையத்தில்  காணொலி மருத்துவ ஆலோசனை வசதி

ரயில்வேயில் முதல்முறையாக மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு சுகாதார மையத்தில் காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் முதல்முறையாக மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு சுகாதார மையத்தில் காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஸ்ரேஸ்தா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் உயர் அழுத்த நீர் இயந்திரம், ரயில்வே ஊழியர்களின் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவமனையில் காணொலி வாயிலாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வசதியைத் தொடங்கி வைத்த அவர், ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்காக 16 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். மேலும், குடியிருப்புப் பகுதியில் மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம்  ஆர்.கே. குல்ஸ்ரேஸ்தா கூறியது:
இந்திய ரயில்வேயில் முதல் முறையாக திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை ரயில்வே சுகாதார மையத்தில்தான், காணொலி வாயிலாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் காசி முதல் ராமேசுவரம் வரை செல்லும் பைசாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நகரும் படிக்கட்டுக்கள் அமைப்பது, திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை வரை வரும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
அப்போது, மண்டல மேலாளர் யு.கே. ரெட்டி, எஸ்ஆர்எம்யூ கோட்டத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com