சுடச்சுட

  

  திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா: ஆதீனம், தம்பிரான் சுவாமிகள் தரிசனம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
  நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை கிராமத்தில் புகழ்பெற்ற, பழைமையான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 24-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் உள்ளார். 
  இந்திய அளவில் பெரிய ஆதீனமான இவ்வாதீனத்தின்கீழ் 80 கோயில்கள், 7 பள்ளிகள் இருப்பதுடன் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் 60 சைவ சித்தாந்த பயிற்சி மையங்கள் மற்றும் 60 திருமுறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  இத்தகையச் சிறப்புமிக்க ஆதீனத்தை 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகள் தோற்றுவித்தார். இவரது, குருபூஜை ஆண்டுதோறும் தை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு மகரத்தலைநாள் குருபூஜை விழா பிப்ரவரி 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
   நாள்தோறும் குருமுதல்வருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மாலை சமய விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜை நாள்களில் 100 ஆதீன சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி மைய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
  தை அசுவதியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை ஆதீனத்தில் உள்ள நடராஜர் சன்னிதியில் புனிதநீர் வைக்கப்பட்டு நடராஜர் மற்றும் ஆத்மார்த்த பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் வைக்கப்பட்டிருந்த கடம் எடுத்துவரப்பட்டு குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 
  தொடர்ந்து, நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பளவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் செய்து வைத்தார். தொடர்ந்து, பழநி நாகசுர கலைஞர் மௌன குருசாமிக்கு நாகசுர கலாநிதி எனும் விருதும், மயிலாடுதுறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராமசேயோனின் ஆன்மிகப் பணியை பாராட்டி ஆன்மிகச் செம்மல் எனும் விருதும், சீர்காழி முருகேசன் தவிலிசைப் பணியை பாராட்டி தவிலிசைத் திலகம் எனும் விருதும், மூவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழியை ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கினார். 
  திருச்சி ஆதீன சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி மையம் இணை இயக்குநர் முத்துகந்தசாமி தேசிகரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், தொடர்ந்து திருவையாறு அரசு இசைக் கல்லூரி பேராசிரியர் சுவாமிநாத குழுவினரின் வீணை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு நமசிவாயமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிடைமருதூர் ஆதீனம் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் பிளஸ் 2 வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி சத்யா, பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயா ஆகியோருக்கு அருட்கொடையும், சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.
  தொடர்ந்து இரவு ஆதீன 24-ஆவது குருமகா சந்நிதானம் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப்பிரவேசம் வாணவேடிக்கை மற்றும் நடன குதிரை உள்ளிட்ட அலங்கார அணிவகுப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. 
  செவ்வாய்க்கிழமை அதிகாலை பட்டணப்பிரவேசத்தின் நிறைவில் ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசார்ய சுவாமிகள் சிவஞான கொலுக்காட்சியில் எழுந்தருளினார். 
  இதில் சூரியனார்கோயில் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாசதேசிக சத்யஞான பரமாசார்ய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிதிருமடம் இளவரசு 
  ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், துலாவூர் ஆதீனம் இளைய குருமகா சந்நிதானம் ஸ்ரீ சுந்தரேச சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சீர்மிகு அஜபா நடேஸ்வர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான் சுவாமிகள், ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய இயக்குநர் கந்தசாமி, ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய இயக்குநர் சண்முகசுந்தரம், பொது மேலாளர் தெய்வசிகாமணி, மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், காசாளர் சுந்தரேசன், கண்காணிப்பாளர் சண்முகம், மெய்கண்டார் ஆசிரியர் சுவாமிநாதன், ஆதீனப் புலவர்கள், ஆதீன கல்வி நிலைய தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai