சட்டைநாதர் கோயிலில் மாசிமாத கோ பூஜை வழிபாடு
By DIN | Published On : 14th February 2019 08:21 AM | Last Updated : 14th February 2019 08:21 AM | அ+அ அ- |

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் புதன்கிழமை தமிழ் மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு மாசி மாதபிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டன. தொடர்ந்து, கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் பசு, கன்று ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்து மலர்கள் தூவி பசுவுக்கு வாழைப்பழம், அகத்திகீரை ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். இதில் கோ பூஜை வழிபாட்டு குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல், மாசி மாதபிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக்குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது.