நாகூர் ரயில் நிலைய மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

நாகையை அடுத்த நாகூர் ரயில் நிலையத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மின் விளக்குகளை

நாகையை அடுத்த நாகூர் ரயில் நிலையத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மின் விளக்குகளை சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற நாகூர்ஆண்டவர் தர்காவின் 462- ஆவது ஆண்டு கந்தூரி விழா பிப்ரவரி 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பிப்ரவரி 19- ஆம் தேதி நிறைவடைகிறது. இவ்விழாவையொட்டி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் நாள்தோறும் நாகூர் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளிலிருந்து வருகைதரும் பக்தர்களில் பெரும்பாலோனோர், ரயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். 
இதனால், நாகூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தைவிட தற்போது பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ரயில் நிலைய முகப்புப் பகுதி, ரயில் நிலையத்தின் வெளிப்பகுதி ஆகியன இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருண்டு காணப்படுகின்றன. இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே வர வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து நாகூரை சேர்ந்த நெளசாத் என்பவர் கூறுகையில், நாகூர் ரயில் நிலைய வளாகத்திலிருந்த மின் விளக்குகள் கஜா புயலின் போது பழுதாகின. இந்த மின் விளக்குகள் இதுநாள் வரை சரி செய்யப்படவில்லை. 
தற்போது தர்கா கந்தூரி விழாவுக்கு  லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், அவர்களின்  பாதுகாப்புக் கருதியாவது, மின் விளக்குகளை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுவே நாகூர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com