சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு தாமதம்

சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால்  பொதுமக்கள் நாள்தோறும் அவதியுறுகின்றனர். 

சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால்  பொதுமக்கள் நாள்தோறும் அவதியுறுகின்றனர். 
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியன இயங்கிவரும் வளாகத்தில், தனிக் கட்டடத்தில் சார் பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 67 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று நகல், திருமணப் பதிவு போன்ற பதிவுகளுக்காக வந்து செல்கின்றனர். 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அரசின் உத்தரவுப்படி, அனைத்துவிதமான பத்திரப் பதிவுகளும், இணையவழியில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. சார் பதிவாளர்  அலுவலகத்தில் கூடுதல்திறன் கொண்ட கணினிகள் இல்லாததாலும், "சர்வர்' குறைபாட்டாலும் கடந்த ஒரு மாத காலமாக  பத்திரப் பதிவு செய்வதில், காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் வில்லங்கச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற  விண்ணப்பித்தவர்கள் அவதியுறுகின்றனர். 
மேலும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிட்ட நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் வாங்க முனைபவர்கள், அதைப் பெற முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர். வங்கிக்கு ஆவணங்களை வழங்கிக் கடன் பெற முடியாததால், இடம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடிப்படை வசதி குறைபாடு: இதேபோல், பத்திரப் பதிவுக்காக சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் வரும் பெண்கள், வயோதிகர்கள் உள்ளிட்டோர் பதிவில் ஏற்படும் தாமதத்தினால், மாலை 6 மணிவரை அலுவலக வளாகத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு காத்திருப்பவர்களுக்கு கழிவறை, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட பத்திரப் பதிவு அலுவலகத்தில் இல்லாதது கூடுதல் வேதனையளிப்பதாக உள்ளது. தவிர, திருமணப் பதிவுக்காக வரும் தம்பதிகளிடம் தேவையற்ற சான்றிதழ்களைக் கேட்டு அவர்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் இணையவழியில் பத்திரப் பதிவு நடைமுறைக்கு வந்து, எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் இவ்வாறு பத்திரப் பதிவு காலதாமதம் ஆவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவில் ஏற்படும் தாமதத்தைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com