திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைணவத் திருத்தலங்களில் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாக திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. மேலும், மேலைவீடு திருவரங்கம் எனவும், வடக்கு வீடு திருவேங்கடம் எனவும், தெற்கு வீடு திருமாலிருஞ்சோலை எனவும் அமைந்த வரிசையில், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயில் கீழ வீடாகப் போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலில் நிகழாண்டு மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சௌரிராஜப் பெருமாள் உப நாச்சியார்கள் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி ஆகியோருடன் திருத்தேரில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழக்கங்களுடன் கீழ வீதியில் அமைந்துள்ள தேர்நிலையிலிருந்து புறப்பட்ட திருத்தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஆண்களும், பெண்களும் என திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
திருப்பங்களில் தேரை பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஏதுவாக இரண்டு கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பரமானந்தம், அறங்காவல் குழு முன்னாள் தலைவர் ராதாகிருட்டிணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com