எச்.ஐ.வி. பாதிப்பு சராசரியாக குறைந்து வருகிறது: ஆட்சியர்

18: ஆண்டுக்கு ஆயிரத்துக்கு 4 பேர் என்ற வீதத்தில் இருந்த எச்.ஐ.வி. பாதிப்பு  சராசரி, ஆயிரத்துக்கு 3 பேர் என்ற அளவில் குறைந்துள்ளது

18: ஆண்டுக்கு ஆயிரத்துக்கு 4 பேர் என்ற வீதத்தில் இருந்த எச்.ஐ.வி. பாதிப்பு  சராசரி, ஆயிரத்துக்கு 3 பேர் என்ற அளவில் குறைந்துள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் சார்பில்,  நடமாடும் ஆய்வக வாகனங்களின் பயணத்தைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: 
எச்.ஐ.வி.-யின் தாக்கத்தைக் குறைக்கவும், காசநோய் தொற்றுகளை 2020-க்குள் முழுமையாக ஒழிக்கவும் சுகாதாரத் துறை சார்பில் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு எச்.ஐ.வி-யின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளின் மூலம், எச்.ஐ.வி. பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் காசநோய் தொற்றைத் தடுக்கும் வகையில், "உடல்நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்பதை மையமாகக் கொண்டு, கிராமங்கள் தோறும் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வக வாகனங்கள் நாகை மாவட்டத்தில்
பயணப்படவுள்ளன. 
இந்த ஆய்வக வாகனத்தில் உள்ள நவீன கருவிகள் மூலம், எச்.ஐ.வி. மற்றும் காசநோய் தொற்றுகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இந்த வாகனங்கள் மூலம் பிப். 23-ஆம் தேதி வரை தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார். 
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன், காசநோய்த் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர் முருகப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com