இலங்கை மீனவர்கள் 25 பேர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 20th February 2019 09:21 AM | Last Updated : 20th February 2019 09:21 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இந்தியக் கடற்பரப்பில் எல்லைத் தாண்டி, மீன்பிடிப்பில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் மீது, இந்திய கடல்சார் மண்டல சட்டம் 1981-ன் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். செளரியா கப்பல், திங்கள்கிழமை காலை நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகள், இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டது, ரோந்து கப்பலில் இருந்த ரேடார் கருவி மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வேதாரண்யம் - கோடியக்கரை கடற்பரப்பில், 5 படகுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடலோரக் காவல் படையினர் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகுகளுடன், ஐ.சி.ஜி.எஸ். செளரியா கப்பல் செவ்வாய்க்கிழமை காலை காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தது. அங்கு, இந்தியக் கடலோரக் காவல் படையினர் கியூ பிரிவு போலீஸார், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் மற்றும் மீன்வளத் துறையினர், இலங்கை மீனவர்களிடம் விசராணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் இலங்கை, திரிகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பிப்ரவரி 17- ஆம் தேதி திரிகோணமலை பகுதியிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இலங்கை மீனவர்கள் 25 பேரும் நாகை, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர், இந்திய கடல்சார் மண்டல சட்ட (அந்நிய கலன்களின் மீன்பிடிப்பை ஒழுங்குப்படுத்துதல்) பிரிவுகளின் கீழ் இலங்கை மீனவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை பயணம்...
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரும், செவ்வாய்க்கிழமை இரவு நாகையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, புதன்கிழமை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்படுவர் என கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தெரிவித்தனர்.