சீர்காழி அருகே அரசு-வேம்பு  மரங்களுக்கு விநோத திருமணம்

சீர்காழி  அருகே கண்ணாங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை விநோத நிகழ்வாக அரசு-வேம்பு மரங்களுக்கு பொதுமக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

சீர்காழி  அருகே கண்ணாங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை விநோத நிகழ்வாக அரசு-வேம்பு மரங்களுக்கு பொதுமக்கள் திருமணம் செய்து வைத்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் திருஞானம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அரசு மற்றும் வேம்பு மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். இக்குடும்பத்தினர் இதை ஒரு சேவையாக நாள்தோறும் செய்து வந்தனர். இந்நிலையில், இந்த இரண்டு மரக்கன்றுகளும் பின்னிப் பிணைந்து மரமாக வளர்ந்தது. இந்த மரத்தைச் சுற்றி கான்கிரீட் கட்டப்பட்டு நாக தெய்வம் வைத்தும் ஊர் பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த மரங்களின் வயது 40-ஐ தொட்டது. 
இதையொட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் விருட்சகராஜா திருமண அழைப்பிதழ் எனும் தலைப்பில் திருமண பத்திரிகை அச்சடித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெற்றிலை பாக்குடன் திருமண அழைப்பிதழ் வழங்கினர். அதை தொடர்ந்து விழா அன்று காலை  அரசு - வேம்பு ஆகிய இரண்டு மரங்களுக்கு முன்பு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் பஞ்சகவ்வியம் மற்றும் முக்கியப் பொருள்கள் அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர்  அரசு - வேம்பு மரங்களுக்கும் பால், தயிர் மற்றும் திரவியப் பொடியுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட கடத்திலிருந்த புனிதநீரால் மரங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு வேஷ்டி, பட்டுப் புடவைகள்  மற்றும் மரங்களுக்கு மாலைகள்அணிவிக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் மூன்று முறை மாலை மாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதுகுறித்து, சிவாச்சாரியார்கள் கூறியது: ஊர்ச் செழிக்கவும் விவசாயம் மற்றும் தொழில் தழைத்தோங்கவும் திருமண தோஷம் நீங்கி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கும் இந்த விழா நடத்தப்படுகிறது என்றனர். விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருமண விழாவை  ஒவ்வொருவரும் தனது இல்லத் திருமண விழாபோல நினைத்து கோலாகலமாக கொண்டாடினர். இந்த விழாவினால் ஊர் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com