முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா
By DIN | Published On : 28th February 2019 09:21 AM | Last Updated : 28th February 2019 09:21 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அமைப்பு சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், இயக்க மாநிலப் பொதுச் செயலர் அ. அமலராஜன் பங்கேற்று, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக புஷ்பவனம், பெரியகுத்தகை, கொத்தங்காடு, பெத்துக்குட்டிகாடு, பண்டாரத்தன்காடு, உலகளந்தான்காடு, பட்டினத்தெரு ஆகிய கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள செந்துரம் மாமரக் கன்றுகள் வழங்கப்பட்டன.
அப்பகுதியை சேர்ந்த தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளை சேர்ந்த 524 மாணவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டுச் சீருடைகள் சென்னை தொழிலதிபர் இஜாஸ் வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறிதல் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற 11 மாணவர்களுக்கும், துளிர் அறிவியல் விநாடி - வினாப் போட்டியில் மாநில அளவில் பங்குபெற்ற மாணவர்களுக்கும், 26-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. துளிர் திறனறிதல் தேர்வில் அதிகளவில் மாணவர்களை பங்கேற்கச் செய்த 8 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு காகிதகலை மற்றும் மந்திரமா ? தந்திரமா? ஆகிய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பள்ளித் தலைமையாசிரியர் இள. தொல்காப்பியன், குழந்தை மற்றும் மகளிர் நல மருத்துவர் திலகம் முருகப்பன், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் தேசிய நல்லாசிரியர் ரா. பாலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெ. மதியரசன், மாநில செயற்குழு உறுப்பினர் கு.வ. மனத்துணைநாதன், மாவட்ட துளிர் இல்ல ஒருகினைப்பாளர் பால. ரணியன், மாவட்ட பொருளர் நந்த ராஜேந்திரன், மாவட்ட செயலர் சந்தோஸ் காட்சன் ஐசக், ஒருங்கிணைப்பாளர்கள் நல்லாசிரியர் எஸ். கண்ணன் ஆசிரியர் வெற்றிமணி, செந்தில்குமார் ராஜு, பிரேமலதா, மாவட்ட துணைத் தலைவர் நா எழிலரசன், மாவட்ட தலைவர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.