முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தமிழை இளமையாக வைத்திருக்க புது சொற்கள் உருவாக்கப்படும்: அமைச்சர் க. பாண்டியராஜன்
By DIN | Published On : 28th February 2019 09:18 AM | Last Updated : 28th February 2019 09:18 AM | அ+அ அ- |

தமிழை இளமையாக வைத்திருக்க புது சொற்கள் உருவாக்கப்படும் என தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார்.
நாகை மாவட்டம், சீர்காழியில் பிறந்து தமிழிசையின் பெருமைகளை உலகறியச் செய்த ஆதி மூவரான முத்துதாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில், கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், 3 நாள் தமிழிசை மூவர் விழா சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கியது.
விழாவில், தமிழ் இசை மூவர்களின் திருவுருவப்படங்களைத் திறந்து வைத்து, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் பேசியது:
தமிழில் 5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. தமிழை இளமையாக வைத்திருக்க புது சொற்கள் உருவாக்கப்படும். இதற்காக சொற்குவியல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. தமிழ் வள மையம் உலகெங்கும் உருவாக்கப்படும்.
1,300 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் 90 பேர் சமண, புத்த மதத்தவராக இருந்தனர். அதன்பின்னர் தோன்றிய அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் மூலம் தமிழிசையை வளர்த்தனர். சுயமரியாதை தத்துவங்களின் தாய் வீடாக இருந்தது சீர்காழி. இசை சார்ந்த தமிழ் மூலம் மீட்டெடுக்கப்பட்டவைதான் வைணவம், சைவம், ஒருங்கிணைந்த இந்து மதம். தமிழால் மீட்டெடுக்கப்பட்ட மதம் இந்து மதம். அதன்பின்னர் 1,560-ஆம் ஆண்டு முதல் 1,800 வரை தமிழிசை மூவர்கள் அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, முத்துதாண்டவர் ஆகியோர் தோன்றி பல்லாயிரக்கணக்கான பாடல்களைத் தமிழில் இயற்றி கீர்த்தனை வடிவமைத்தனர். திருவாரூர் மூவர்களுக்கு இணையான மரியாதை உலக நாடுகளில் சீர்காழி தமிழிசை மூவர்களுக்கு உண்டு.
தமிழகத்தின் கலை, பண்பாட்டில் முக்கியமானது இசை வடிவம். இந்த இசை வடிவத்தை அழியாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பண்பாடு சார்ந்த படைப்புகள், தொழிலில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. உலகம் முழுவதும் தமிழர் கலைகள் முத்திரைப் பதித்து வருகின்றன. கலையின் பல வடிவம் வேலைவாய்ப்பைத் தரக்கூடியது.
இசைக் கலைஞர்களுக்கு இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ பி.வி. பாரதியின் கோரிக்கையை ஏற்று சீர்காழி மணி மண்டபத்தில் வாழ்வாதாரம் தரக்கூடிய கலைசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சீர்காழியில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி இசை கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நூலகத்துறையில் வகைப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்த உலக நூலகத் தந்தை அரங்கநாதன் பிறந்த ஊரான சீர்காழியில், சொந்த நூலகக் கட்டடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
விழாவுக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சீர்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி, கோட்டாட்சியர் தேன்மொழி, வட்டாட்சியர் இரா. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் வரவேற்றார்.
தொடர்ந்து, நர்த்தகி நட்ராஜ் குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. விழாவில், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் பக்கிரிசாமி, ராஜமாணிக்கம், நற்குணன், அதிமுக ஜெ. பேரவை செயலர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை
ந. கலையரசி நன்றி கூறினார்.