முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தமிழ் ஊர்திப் பயணம்: மயிலாடுதுறையில் வரவேற்பு
By DIN | Published On : 28th February 2019 09:22 AM | Last Updated : 28th February 2019 09:22 AM | அ+அ அ- |

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, தமிழ் ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையிலான குழுவினருக்கு மயிலாடுதுறையில் புதன்கிழமை வரவேற்பு
அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தமிழுக்கும், தமிழருக்கும் முன்னுரிமை அளிப்பதற்காக கடந்த 27 ஆண்டுகளாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் நடைப்பயணம் நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், தற்போது உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, தமிழ் ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் தமிழறிஞர் நாகராசன், முனைவர் ஜெ. ஜெயவாணி ஸ்ரீ ஆகியோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணக் குழுவினர், நாகை மாவட்டம், மயிலாடுதுறையை புதன்கிழமை இரவு வந்தடைந்தனர்.
அவர்களுக்கு மயிலாடுதுறை திருக்குறள் பேரவை மற்றும் திருவள்ளுவர் பேரவை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார். பொருளாளர் சு. இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேரவை செயற்குழு உறுப்பினர் இரா. செல்வகுமார் வரவேற்றார். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வீதி. முத்துக்கணியன் நன்றி தெரிவித்தார்.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் இமயவரம்பன், இராமதாசு, பேராசிரியர் வே. கண்ணையன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.