Enable Javscript for better performance
ரூ.2 ஆயிரம் சிறப்புத் திட்டக் கணக்கெடுப்பு அவசரமாக நடைபெறுகிறது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்

    ரூ.2 ஆயிரம் சிறப்புத் திட்டக் கணக்கெடுப்பு அவசரமாக நடைபெறுகிறது

    By DIN  |   Published On : 28th February 2019 09:19 AM  |   Last Updated : 28th February 2019 09:19 AM  |  அ+அ அ-  |  

    தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டுக்குகீழ் வாழ்வோருக்காக ஒருமுறை ரூ. 2 ஆயிரம் அளிக்கும் சிறப்புத் திட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணிகள் கால அவகாசம் இல்லாமல் அவசரக் கோலத்தில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
    இந்தியாவில் வாழும் சிறு,குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை கொடுப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, மாநில அரசும் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வழங்கும் சிறப்புத் திட்டதை அறிவித்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    இத்திட்டத்துக்காக பயனாளிகள் பட்டியல் ஏற்கெவே எடுக்கப்பட்ட பொருளாதாரக் கணக்கெடுப்பு விவரங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால், அதில் பெரும்பான்மையான ஏழைகள் விடுபடும் நிலை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 2013-ல்  மகளிர் குழுக்கள் மூலம் குடும்ப பொருளாதராக் கணக்கு விவரப்படி எடுக்கப்பட்டு இ-மதி எனும் இணைய தளத்தில் நெறிப்படுத்தப்பட்ட பட்டியல் விவரப்படி பயனாளிகள் வங்கிக் கணக்குகள் சேகரிக்கப்பட்டன. இவற்றிலும், முறையான விவரங்கள் இல்லாமல் தகுதியானவர்கள் விடுபடுவது தெரிய வந்தது. 
    இதையடுத்து, மூன்றாவது கட்டமாக தகுதியானவர்களை கண்டறியும் வகையில் பொருளாதார விவரங்களை உள்ளடங்கிய தகவல்களுடன் ஏழைகளை கண்டறிய கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இற்கான புள்ளி விவரங்களை புதிதாக சேகரிக்க 4 பக்கத்தில் படிவம் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் கணக்கெடுப்புக்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குடும்பத் தலைவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த புள்ளி விவர படிவத்தில் விவசாயத் தொழிலாளர், உப்பளத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழிலாளர் வகை விவரங்களும் கோரப்பட்டுள்ளன. நூறுநாள் வேலைத் திட்ட அடையாள அட்டை எண், ஆதாரர் எண், வங்கி கணக்கு எண் என பல்வேறு விவரங்கள் கோரப்படுகின்றன. 
    இப்பணி பெரும்பாலும் மகளிர் குழுக்கள், குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமே  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதிய அவகாசம், பயிற்சி இல்லாமல் மேற்கொள்ளப்படுவதால் முழுமையான விவரங்களையும், தகுதியானவர்கள் விடுபடாமலும் அதுவும் வியாழக்கிழமைக்குள் (பிப்.28) திரட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவசரக் கோலத்தில் நடைபெறும் இப்பணி அரசின் நோக்கத்தை நிறைவேற்றுமா என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    உதாரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்த புள்ளி விவரங்களை திரட்டி அளிப்பதில் ஊராட்சி செயலர்கள் எனப்படும் ஊராட்சி எழுத்தர்கள் போதிய அளவில் ஒத்துழைப்பு நல்கவில்லை என்பது தெரிகிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் மீட்புப் பணிக்கு எழுத்தர்கள் மூலம் செலவிடப்பட்ட பட்டியலுக்குரிய தொகை இதுவரை வழங்காததால் எழுத்தர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற முடியவில்லை என கூறப்படுகிறது. 
    படிவத்தில் கோரப்படும் நிலம் உள்ளிட்ட சொத்து விவரங்களுக்கு சான்றுகள் ஏதும் இல்லாத சூழலில் சேகரிக்கப்படுவதும், உரிய பயிற்சி இல்லாத மகளிர் குழுக்கள் எந்த அளவில் எதார்த்த நிலவரங்களை பதிவு செய்வார்கள் என்பதற்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கணினி வாயிலாக இணையத்தில் பதிவிடும் பணியும் நடைபெறுகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களின் கணினிகள் உதவியுடன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு படிவத்தை பதிவேற்றம் செய்ய இணைய சேவை சீராக இருந்தால் 13 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதாகத் தெரிகிறது.
    பாடம் தந்த கஜா: இதேபோன்ற முறையில்தான் கஜா புயல் பாதிப்புக்கான பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. தயாரிப்பில் விவரங்கள் விடுபட்டதால் சுமார் 6 ஆயிரம் பேருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் தொகை ஏறாமல் இதுவரை நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காலதாமதல் ஏற்பட்டாலும் கணக்கெடுப்புப் பணியை கல்லூரி மாணவர்கள் அல்லது ஆசிரியர், அரசு ஊழியர்களைக் கொண்டு முறையான பயிற்சிக்கு பின்னர் தயாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஒருமுறை ரூ.2 ஆயிரம் வழங்கும் சிறப்புத் திட்டம் என்பது ஏழைகளுக்கு உதவும் நோக்கமுடையதாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.
    விவரங்கள் சேகரிப்பில் அவசர நிலை ஏற்பட்டால் தகுதியானவர்கள் விடுபட்டாலோ அல்லது விபரங்களில் ஒரு பூஜியம்  விடுபட்டாலோ( புயல் நிவாரணத்தில் தோப்புத்துறை வங்கியின் ஐஎப்எஸ்சி எண்ணில் முதலில் வரும் ஒரு பூஜியம்  விடுப்பட்டுபோனதால் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணம் ஏறவில்லை) அரசின் நோக்கம் வீணாகிவிடும். அத்துடன் எதிர் வரும் தேர்தலை நோக்கமாகக் கொண்டுதான் இந்த தொகை வழங்கப்படுவதாகவும் ஒருதரப்பில் கூறப்படுகிறது. அப்படியாக இருந்தாலும் பயனாளிகள் விடுபட்டாலோ அல்லது நிவாரணம் போல பட்டியலில் கோளாறு ஏற்பட்டாலோ அதுவும் பாதிப்பாக மாறும் என்பதே எதார்த்தம்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp