முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேகத்தடைகளில் வெள்ளை நிறம் பூச வலியுறுத்தல்
By DIN | Published On : 28th February 2019 09:21 AM | Last Updated : 28th February 2019 09:21 AM | அ+அ அ- |

பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத் தடைகளில் வெள்ளை நிறம் மங்கிவிட்டதால் மீண்டும் வண்ணம் பூச வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சீர்காழி- மயிலாடுதுறை- சிதம்பரம் நெடுஞ்சாலைகளில் வளைவுகள், பள்ளி பகுதிகள், சாலை சந்திப்புகள், மருத்துவமனை என பிரதான பகுதிகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி தற்போது புதிதாக பல இடங்களில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், வேகத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட அளவையும் கடந்து, உயரமான அளவில் வேகத்தடைகள் அமைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பல இடங்களில் வேகத்தடைகளை எச்சரிக்கும் வகையில் பூசப்பட்ட வெள்ளை நிறம் மங்கிப்போய் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறுகையில், சீர்காழி, மயிலாடுதுறை நெடுஞ்சாலைகளில் இரவில் ஒளிரும் வில்லைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால், வேகத்தடைகளில் வெள்ளை நிறம் பூசி ஒளிரும் வில்லைகளைப் பதிக்க வேண்டும். புறவழிச்சாலையில் விளிம்புகள், வளைவுகள், சாலை மையம் என அனைத்து இடங்களிலும் வில்லைகளைப் பதிக்க வேண்டும் என்றார்.