ரெளடி கொலை வழக்கில் 6 பேர் கைது
By DIN | Published On : 28th February 2019 09:23 AM | Last Updated : 28th February 2019 09:23 AM | அ+அ அ- |

நாகையில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகை, கீரைக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் தவக்களைசெந்தில் என்கிற செந்தில்குமார் (33). இவர் மீது நாகையைச் சேர்ந்த ஜெட்லி கொலை வழக்கு உள்பட 2 கொலை வழக்குகள் நாகை நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிப்.25-ஆம் தேதி பிற்பகல் நாகை நடராஜர் பிள்ளைத் தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செந்தில்குமாரை, காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் நாகை பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ர. சிவக்குமார் (26), அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த செ. முனீஸ்வரன்(39), வெளிப்பாளையம் நம்பியார் நகரைச் சேர்ந்த பா. ரவிக்குமார் (23), தஞ்சாவூர், வடக்கு வாசல், ஏ.வி.பதி நகரைச் சேர்ந்த ர. சசிக்குமார் (22), மு. மணிகண்டன் (26), ப. குமரேசன் (24) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர். கைதான 6 பேரும் நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதாகியுள்ள சிவக்குமார் ஜெட்லியின் ஆதரவாளர் என்பததால் முன்விரோதம் காரணமாக செந்தில்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.