வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th January 2019 07:49 AM | Last Updated : 05th January 2019 07:49 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறத் தகுதியானோர், பிப். 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகையாக, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200-ம், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 300-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 400-ம், பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலாண்டில் உதவித் தொகை பெற, கல்வி நிலையைப் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்ப் பதிவேடுகளில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவராக இருந்தால் 45 வயதுக்குள்பட்டவராகவும், இதர வகுப்பினராக இருந்தால் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அசல் கல்விச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் பிப். 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.