அறுவடைக்கு தயாரான பாரம்பரிய ரக நெற்பயிர்கள்

சீர்காழி பகுதியில் பாரம்பரிய ரக நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சீர்காழி பகுதியில் பாரம்பரிய ரக நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோரின் தீவிர முயற்சியின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். 
அந்தவகையில், சீர்காழி வட்டத்துக்குள்பட்ட நாங்கூர், திருவெண்காடு, நிம்மேலி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய  நெல் ரகங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகள் முற்றிலும் அழிகின்றன. ஆனால், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் வயல்களில் நெற்பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய நண்டு, சிலந்தி, சிட்டுக் குருவி, தொங்கட்டான் சிலந்தி, மாவுப்பூச்சி உள்ளிட்ட ஏராளமான பூச்சி வகைகள் வயலில் கூடுகட்டி வசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
 இதுகுறித்து, திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் கிராம இயற்கை விவசாயியும், ஆசிரியருமான அம்பேத் கூறியது: கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரம்பரிய ரக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, சீரக சம்பா மற்றும் நாட்டு பொன்னி ரகங்களை நண்பர்களுடன் இணைந்து சாகுபடி செய்துள்ளேன். இந்த ரக நெல் வகைகள் சுமார் 150 நாள்களைக் கொண்ட நீண்ட பயிராகும். இந்த ரக நெல் வகைகளை சாகுபடி செய்யும்போது பூச்சித் தாக்குதல்  ஏற்படாது. தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. மேலும், இயற்கையான முறையில் பாரம்பரிய ரக நெல்களை சாகுபடிசெய்துள்ளதால் வயலில்  நண்டு, சிலந்தி, நத்தை, சிட்டுக்குருவி, மாவுப்பூச்சி,  தொங்கட்டான் சிலந்தி உள்ளிட்ட பெயர் தெரியாத ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவைகள் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதுடன், மண் வளம் பெருகவும் உதவுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com