புயல் நிவாரணம் முழுமையாக வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th January 2019 09:47 AM | Last Updated : 07th January 2019 09:47 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருள்களை காலம் தாழ்த்தாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்த 27 வகையான நிவாரணப் பொருள்கள் இதுவரை பெரும்பாலான குடும்பங்களுக்கு வழங்கவில்லை. இதை, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புயல் சீரமைப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கும், அரசின் பல்வேறு துறையினரின் செயல்பாட்டுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புயலுக்கு பின்னர் இணைய பாதிப்பால் வேதாரண்யம் பகுதியில் உள்ள வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க அவதிக்குள்ளாவதால் வங்கி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவர் செல்வராசு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.