Enable Javscript for better performance
புயல் நிவாரணத்துக்காக அவதியுறும் மக்கள்..!- Dinamani

சுடச்சுட

    

    புயல் நிவாரணத்துக்காக அவதியுறும் மக்கள்..!

    By DIN  |   Published on : 08th January 2019 09:28 AM  |   அ+அ அ-   |    |  

    நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை, நிவாரணப் பொருள்கள் கிடைக்காத மக்கள் வங்கிகளுக்கும், அலுவலகங்களுக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருக்கும் அவலநிலை தொடர்கிறது. 
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடுகள் பாதிப்புக்கான பட்டியல் தயாரிக்கும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், கிராம உதவியாளர்களின் உதவியுடன் அரசின் மற்ற துறைகளைச் சேர்ந்த வெளியூர் அலுவலர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதாபிமானத்தோடு செயல்பட்டனர்.
    அவசர நிலையில் எடுக்கப்பட்ட பட்டியல் தயாரிப்பில் சில இடங்களில் பயனாளிகளின் பெயர்கள் விடுப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதில், பல கிராமங்களில் குடும்பத்துடன் வசித்தும் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப அட்டை வைத்திருக்காதவர்கள் அரசின் உதவித் தொகையை பெறுவோர் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுபட்டவர்களும் அடங்குவர். கூரை வீடுகளின் முழு பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம், பகுதி பாதிப்புக்கு ரூ. 5,200 மாடி, ஓட்டு வீடுகள் பாதிப்புக்கு ரூ. 5, 200 வீதமும் நிவாரணத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தும் பணியும் நடைபெற்றுள்ளது.
    நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு அறிவித்த 27 பொருள்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்டியலில் விடுபட்டது, வங்கிக் கணக்கு எண் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவதில் நேர்ந்த பிழை, இணைய சேவை குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் 20 சதவீதம் பயனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 
    நிவாரணம் கிடைக்காதவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், எழுத்தறிவு குறைந்தவர்கள். 
    நாள்தோறும் வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளவும், அவ்வாறு பணம் செலுத்தப்பட்டிருந்தால் அதை எடுப்பதில் உள்ள பிரச்னைகளாலும் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். பலர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று விசாரிப்பது, மனு அளிப்பது, ஆவணங்களுக்காக நகலகங்களில் நின்று அவதிப்படுவது தொடர்கிறது. பணம் கிடைக்காமல் போனதற்கான காரணம் தெரியாமல் மனுக்களை எழுதி, ஆவணங்களின் நகல்களை இணைத்து கொடுத்துவிட்டு காத்திருப்பதும், எந்த அலுவலரிடம் கேட்பது என தெரியாமல் வளாகத்திலேயே பசியுடன் காத்திருந்து அவதிப்படுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
    அவ்வாறு அளிக்கப்படும் மக்களின் மனுக்களை தனியாக பதிவேடுகள் பயன்படுத்தி பதிவு செய்யப்படாததால் மனுக்கள் கேள்விக் குறியாகவே உள்ளன. இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக கவனம் செலுத்தவும், உரிய காரணங்களை கண்டறிந்து பிரச்னைக்கு தீர்வு காணவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருபவர்களிடம் பட்டியல் நிலவரத்தை தெரிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகிறவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp