சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்ட அபாயத்தை விளக்கி பரப்புரை செய்ய முடிவு: மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹட்ரோகார்பன் திட்ட அபாயத்தை மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் மக்களுக்கு விளக்கும் வகையில் பரப்புரை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் தெரிவித்தார். 
  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரிப் படுகையை முற்றிலுமாக கரிக்காடாக ஆக்கும் வகையில் பேரழிவு திட்டங்களை இந்திய அரசு  தொடர்ந்து திணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்கெனவே எதிர்த்து வரும் நிலையில் தடையில்லா  எண்ணெய் வயல் உரிமம் அளிப்பு (ஓஏஎல்பி) திட்டத்தின் 2-ஆவது சுற்று ஏலத்துக்கு விண்ணப்பம் பெற மார்ச் 12 கடைசி தேதி என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக முதலாளிகள் காவிரிப் படுகையை ஏலம் எடுக்க முயன்று வருகின்றனர். நான்கு மாநிலங்களில் 14 இடங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 474.19 சதுர கிலோ மீட்டரை  ஏலத்துக்கு கொடுக்கிறார்கள். திருப்பூண்டி, கருப்பங்குளம், கரியாப்பட்டினம், மடப்புரம் ஆகிய 4 இடங்களில்  நிச்சயமாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் வர உள்ளன. இதுமட்டுமின்றி, வரும் மே மாதம் 3-ஆவது சுற்றுக்கு விண்ணப்பங்கள் பெற்று மேலும் 1,800 சதுர கிலோ மீட்டரை ஏலத்தில் வழங்க உள்ளனர். 
  முதல் சுற்றில் 5,099 சதுர கிலோ மீட்டரை காவிரிப் படுகையில் ஏலத்தில் கொடுத்தார்கள். வேதாந்தா நிறுவனம்  ஆழமற்ற கடல் பகுதியில் இரண்டு மண்டலங்களிலும், 731 சதுர கிலோ மீட்டர் கொண்ட மண்டலத்தை ஓஎன்ஜிசியும் ஏலத்தில் எடுத்தனர். அடுக்கடுக்காக தமிழகத்தில் காவிரிப் படுகையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை இந்திய அரசு செய்து வருகிறது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் நஞ்சுக்காடாக மாறி, நிலத்தடி நீரும், விவசாயமும் முற்றிலும் ஒழிந்து போகும். கடற்கரையோரப் பகுதிகளில் நிலம் உள்வாங்கி, கடல்நீர்  உள்ளே வரக்கூடிய அபாயம் உள்ளது.
  இத்திட்டத்தை செயல்படுத்துவதன்மூலம், விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து ஆக்கிரமித்து முதலாளிகளிடம் ஒப்படைத்து தொழிற்சாலைகள் அமைக்க உள்ளனர். அத்தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் எரிவாயு அளிக்கும் பணியை அதானியிடம் ஒப்படைத்துள்ளனர். கஜா புயல் பாதிப்பால் மக்கள் சிரமப்பட்டு கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, அதானி குழுமத்துக்கு இந்த உரிமத்தை வழங்கி இந்திய அரசு அடிக்கல்  நாட்டியுள்ளது. 
  காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது ஒன்றே தமிழகத்தின் உணவு  உறுதிப்பாட்டை பாதுகாக்கும் ஒரே வழி. அனைத்துக் கட்சிகளும் போராட வேண்டிய காலம் இது. இந்த அபாயங்களை மக்களுக்கு விளக்கி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி மாதம் தொடங்கி பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். 
  மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தாது என்று தமிழக அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், கடந்த 2018 அக்.9-ஆம் தேதி அமைச்சர் கருப்பண்ணன் தில்லி சென்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்சவர்த்தனனை நேரில் சந்தித்து, ஹைட்ரோ  கார்பன் திட்டத்துக்கு இனி மக்கள் கருத்தை கேட்க வேண்டாம். கேட்காமலே நடைமுறைப்படுத்த விதிகளை  மாற்றி அமைக்கவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனு அளித்து வந்துள்ளார். எனவே  இத்திட்டங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. தேர்தல் வர இருக்கிறது. அது முக்கியம் தான். ஆனால், மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் களமிறங்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai