சுடச்சுட

  


  நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், சுனாமியில் பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முழு அளவில் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. எந்த விதமான கவலைகளுக்கும் இடமளிக்காமல், மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் பயின்று வாழ்வில் சிறப்பாக முன்னேற வேண்டும் என்றார்.
  இதைத் தொடர்ந்து, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பொங்கல் மற்றும் இனிப்புகள், கரும்புத் துண்டுகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர், அன்னை சத்யா முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களைச் சந்தித்து அவர் உரையாடினார்.
  நாகை வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், காப்பக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
  உறுதிமொழி ஏற்பு...
  சீர்காழி, ஜன. 12: சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
  பின்னர், பெற்றோர்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தாளாளர் பி. சிவசங்கர், இயக்குநர் மதன், பள்ளி முதல்வர் ஜேக்கப் ஞானசெல்வன், துணை முதல்வர் பூவிழி ஆகியோர் பங்கேற்றனர். 
  இதேபோல் சீர்காழி ச.மு.இ.மேல்நிலைப்பள்ளியில் நிர்வாக அலுவலர் எம். தங்கவேலு தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பள்ளி முதல்வர் தங்கத்துரை, துணை முதல்வர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  பெற்றோர்களுக்குப் போட்டி...
  மயிலாடுதுறை, ஜன.12: மயிலாடுதுறை அருகே மேலையூரில் உள்ள அழகுஜோதி அகாதெமியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பள்ளி தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தாளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நோயல்மணி வரவேற்றார். விழாவில் உழவு மாடுகள், ஏர் கலப்பை ஆகியவற்றின் மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, பெற்றோருக்கு காய்கறிகளில் சிற்பங்கள் செதுக்கும் போட்டி நடைபெற்றது. பின்னர், இவற்றின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
  வேதாரண்யத்தில்...
  வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி. முருகன் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறை பேராசிரியர் பி.பிரபாகரன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் டி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைக் காவல் கண்காணிப்பாளர் இராம. ஸ்ரீகாந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். வணிகவியல் துறைத் தலைவர் ஏ. மாரிமுத்து, ஆங்கிலத்துறை பேராசிரியர் திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai