சுடச்சுட

  


  கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை தேவையான சீரமைப்புப் பணிகள் தொடரும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நிகழ் பருவத்துக்கான கொள்முதல் பணிகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  பின்னர் அவர் கூறியது:
  நாகை மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 3,60,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜன.9 -ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் முதற்கட்டமாக 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இரண்டாம் கட்டமாக 26 நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.
  மேலும், ஜன.18-ஆம் தேதி 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையங்கள் அறுவடைப் பணிகள் நிறைவடையும் காலம் வரை தொடரும்.
  நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 70 மாநில அரசின் ஊக்கத் தொகை உள்பட ரூ.1,840- க்கும், பொது ரக நெல் ரூ.1800-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
  மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை சீரமைப்புப் பணிகள் தொடரும் என்றார் அமைச்சர்.
  இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்(பொ) பி.திருநாவுக்கரசு, உதவி மேலாளர்(தரக்கட்டுப்பாடு)ஜி. சீனிவாசன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் அவை.ஆர்.பாலசுப்பிரமணியன், சிக்கல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai