இன்னமும் களை கட்டாத பொங்கல் வியாபாரம்...!

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு இன்னமும் இரண்டு தினங்களே இருந்தாலும் சனிக்கிழமை மாலை வரை


தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு இன்னமும் இரண்டு தினங்களே இருந்தாலும் சனிக்கிழமை மாலை வரை நாகை கடைவீதிகளில் வியாபாரம் களை கட்டவில்லை. நாகப்பட்டினத்தில் பெரிய கடைவீதி, ஆஸாத் மார்க்கெட், வெளிப்பாளையம், நாகூர் ஆகியவற்றில் வழக்கமாக கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது வியாபாரம் மும்முரமாக இல்லை. கூட்டமும், வெளியூர்க்காரர்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டத்தில், மக்கள் இன்னமும் சகஜ நிலைக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது. காசுடன் வந்து கைப்பைகளில் பொருட்களை அள்ளிக் கொண்டு பேருந்துகளிலும், ரயில்களிலும், இருசக்கர வாகனங்களிலும் உற்சாகமாகப் பயணிக்கும் பெண்களின் கூட்டத்தை நிகழாண்டில் காண முடியவில்லை.
ஆடிப்பட்டத்தில் விதை விதைத்து, மார்கழியில் மகசூல் ஆகும் நெல் விளைச்சலைக் கொண்டு, வருங்கால சுப நிகழ்வுகளுக்குத் தொடக்கமாகவும், வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் கொண்டாடப்படுவதுதான் இந்த பொங்கல் திருவிழா.
பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அமர்க்களப்படும் இந்த மூன்று நாள் விழாவுக்கு அச்சாரமாக அமைவது இந்த நாள்களுக்காக பொதுமக்கள் முன்கூட்டியே வாங்கும் புத்தாடைகளும், புதுப்பானையும், சில உணவுப் பொருட்களும்தான். ஆனால் மிகப் பெரும் ஜவுளி நிறுவனங்களில் கூட எதிர்பார்த்தபடி கூட்டம் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பொங்கலுக்கு முந்தைய தினமான திங்கள்கிழமை வியாபாரம் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தரிசியைக் கொண்டு பொங்கலிடும் வழக்கம் கிராமப் புறங்களில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. விறகு அடுப்பின் பயன்பாடு குறைந்து, காஸ் அடுப்பின் புழக்கம் பிரதானம் பெற்றிருந்தாலும், பாரம்பரிய முறைப்படி வீட்டுக்கு வெளியே அல்லது வீட்டின் முற்றத்தில் புதிய அடுப்பில் அல்லது செங்கற்களைக் கொண்ட அடுப்புக் கட்டிகளால் ஆன அடுப்பில், புதிய மண் பானையில் பொங்கலிடும் வழக்கம் இன்றளவும் தொன்று தொட்டு தொடர்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாள்களே உள்ள நிலையில் சனிக்கிழமையன்று கடைவீதிகளில் கரும்புகள், மண் பாண்டங்களின் வரத்து அதிகம் இருந்தாலும், விற்பனை குறைந்தே காணப்பட்டது. 
மண் பாண்டங்களைப் பொருத்தவரை மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தே வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள். சனிக்கிழமை நிலவரப்படி பொங்கல் பானைகள் குறைந்தபட்சம் ரூ. 100- இல் இருந்து அதிகபட்சமாக ரூ. 200 என்ற விலைக்கு, அளவுக்கு ஏற்றபடி விற்பனையாகின. பொங்கல் சட்டிகள் ரூ. 50 முதல் ரூ. 100 வரையிலான விலைகளிலும், அடுப்புகள் ரூ. 150 என்ற விலையிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக விற்பனையாகின. 
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய 9-ஆவது நாள், 7 -ஆவது நாள் அல்லது 5-ஆவது நாள், எண்ணிக்கை அடிப்படையில், திருமணமான சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் சீர் வரிசை அளிக்க பெரும்பாலானோர் முனைப்புக் காட்டுவர் என்பதால், வழக்கமாக பொங்கலுக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே மண் பானை, மண் சட்டி, கரும்பு உள்ளிட்டவைகளின் விற்பனை விறுவிறுப்படையும்.
ஆனால், இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய 4 நாள்கள் வரைகூட மண் பானை, மண் சட்டிகளை கடைவீதிகளில் காண இயலாத நிலையே இருந்தது. கடந்த ஆண்டில் ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலான விலைகளில் விற்பனையாகிய இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்துகள் தற்போது ரூ. 25 என்ற அதிக விலையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 
புதுமணத் தம்பதியருக்குத் தாய் வீட்டுப் பொங்கல் சீர் வரிசையாக பித்தளைப் பொங்கல் பானைகளை கொடுக்கும் பழக்கம் இருப்பதால் அனைத்துப் பாத்திரக் கடைகளிலும் பித்தளைப் பொங்கல் பானைகளின் விற்பனை சூடுபிடிக்கும். நிகழாண்டில், இதுபோன்ற விறுவிறுப்பான முன்கூட்டிய வியாபாரத்தைக் காண முடியவில்லை. 
கரும்பு, வாழை என அனைத்து வகைப் பயிர்களையும் கஜா புயல் அழித்தொழித்துச் சென்றதால், அவற்றின் உற்பத்தி மிகவும் குறைந்திருப்பதாகவும், வெளி மாவட்டங்களிலிருந்தே கரும்பு, வாழை போன்றவற்றை வாங்கி வந்து விற்பனை செய்ய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சற்று விலையை கூட்ட வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, நாகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
கடந்த ஆண்டில் 5 நாள்களுக்கு முன்பிருந்தே கட்டுக்கடங்காத கூட்டத்துடன் காணப்பட்ட கடைவீதிகள், பொங்கல் பண்டிகைக்கு இருநாள்களே இருக்கும் நிலையில், சனிக்கிழமை வரை கூட்டம் குறைவாகவே இருந்தது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களில் நடைபெறும் வியாபாரத்தைக் கொண்டே நிகழாண்டில் பொங்கல் பண்டிகையின் உற்சாகத்தையும், மக்களின் மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com