புயலில் பாதித்த வீடுகளை சீரமைக்க உதவிய தன்னார்வலர்கள்

வேதாரண்யம் அருகேயுள்ள காடந்தேத்தி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள்,

வேதாரண்யம் அருகேயுள்ள காடந்தேத்தி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகள், கூரை வீடுகளை சீரமைக்க ஈகை அறக்கட்டளை, திசை அமைப்பினர் இணைந்து உதவியுள்ளனர்.
கஜா புயாலால் வேதாரண்யம் பகுதியில் அளவுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. இதுகுறித்து, டிச.7-ஆம் தேதி தினமணியில் கூரை, தொகுப்பு வீடுகளை சீரமைக்க தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்க்கும் கிராமத்தினர் எனும் தலைப்பில் செய்தி பிரசுரமானது. இத்துடன், காடந்தேத்தி காலனி தெரு மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசு கட்டிக் கொடுத்த ஓட்டு வீடுகள் சேதமடைந்த படமும் பிரசுரமானது. 
இதையறிந்த சென்னை சிட்லபாக்கம் ஈகை அறக்கட்டளையினர், திசை அமைப்பினர் அடுத்த சில நாள்களில் காடந்தேத்திக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க முன்வந்தனர். இடிபாடுகளை அகற்றவும், வீடுகளை சீரமைக்கவும் தன்னார்வலர்கள் களப்பணியாற்றி உதவினர். தென்னை ஓலை கீற்றுகள் உள்ளிட்ட உப பொருள்களையும், தொகுப்பு வீடுகளை சீரமைக்க மங்களூர் ஓடுகள், சிமென்ட், சிமென்ட் அட்டைகள் போன்றவைகளை வழங்கினர். 
இதுகுறித்து, ஈகை அறக்கட்டளை நிறுவனர் வி. கண்ணன் கூறியது:
புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டுமென்ற என்னம் எங்களுக்குள் இருந்தது. தினமணியில் வெளியான செய்தியை பார்த்தோம். இதையடுத்து ஒரு குழுவினர் காடந்தேத்தியில் நேரில் பார்த்து மக்களுக்கு எந்த மாதிரியான உதவி தேவை என்பதை அறிந்து திட்டமிட்டோம். தொடர்ந்து, அறக்கட்டளை, திசை தன்னார்வலர்கள் களத்தில் தங்கி பணியாற்றினோம். அந்த பகுதி மக்களும் ஒத்துழைத்தனர். புயலில் வீடுகளை இழந்து வெயிலிலும், பனியிலும் அவதியுற்ற மக்களுக்கு பொருளாதாரம் மட்டுமல்லாது மனித சக்தியாகவும் எங்களை நாங்களே இணைத்துக் கொண்டு உதவியதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார். 
காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளருமான எஸ்.எம்.டி. மகேந்திரன்
கூறியது: 
குறித்த நேரத்தில் கிடைத்த உதவி மக்களுக்கு பயனளிக்கிறது. கூரைகள், தொகுப்பு வீடுகள் என சுமார் 120 வீடுகளை சீரமைக்க உதவினார்கள். சாலைகளில் கூடாரங்களை அமைத்தும் பள்ளிக் கூடங்களிலும் தங்கி வந்த மக்களுக்கு பேருதவியாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com