"ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் மீனவர்கள் பங்கேற்க வேண்டும்'

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாய நிலங்கள் மட்டுமன்றி, கடல் வளமும் பாதிக்கப்படும்

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாய நிலங்கள் மட்டுமன்றி, கடல் வளமும் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் மீனவர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாய்மேடு, மருதூர், கரியாப்பட்டினம், செம்போடை, புஷ்பவனம், தலைஞாயிறு, திருக்குவளை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் பி.ஆர். பாண்டியன் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருக்காரவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தால், கடலூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதி பேரழிவுக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயம் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 
திருக்காரவாசலில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில், விவசாயிகள் மட்டுமல்லாது மீனவர்களும் பங்கேற்க வேண்டும்.
கஜா புயலால் புஷ்பவனம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் களிமண்ணில் புதையுண்டு கிடக்கும் படகுகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் பாண்டியன்.
இந்த பிரசாரப் பயணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் புண்ணியமூர்த்தி,  அமைப்புச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார், நாகை மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எம். மணி, வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பிரசாரப் பயணம் தொடக்கம்...
திருத்துறைப்பூண்டி, ஜன. 22: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலிருந்து ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பிரசாரப் பயணம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.
திருக்காரவாசலில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; வேதாந்தா நிறுவனத்தை காவிரி டெல்டா பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும்; காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த பிரசாரப் பயணத்தை, திருத்துறைப்பூண்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.எஸ். பாண்டியன் தொடங்கி வைத்தார். 
தொடக்க நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.வி.கே.செந்தில் தலைமை வகித்தார்.
இதில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் சேரன் செந்தில்குமார், மாநிலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாநில அமைப்புச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார், நாகை மாவட்டச் செயலாளர் எஸ். ராமதாஸ், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் எம். மணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் அக்ரி அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பிரசாரப் பயணம் திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com