ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
By DIN | Published On : 24th January 2019 02:58 AM | Last Updated : 24th January 2019 02:58 AM | அ+அ அ- |

சீர்காழியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். பத்மநாபன் புதன்கிழமை பார்வையிட்டார்.
சீர்காழியில் ரூ. 5.33 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் சில காரணங்களால் தற்போது வரை திறக்காமல் உள்ளது. இந்நிலையில், சீர்காழி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட நீதிமன்ற வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பொதுப் பணித் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் 2019 ஜனவரி முதல் வாரத்தில் புதிய நீதிமன்ற திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை. சில பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதன்கிழமை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். பத்மநாபன் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பிப்ரவரி மாத இறுதிக்குள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பெற்று புதிய நீதிமன்ற வளாகம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.