போராட்டம் தொடரும்ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
By DIN | Published On : 28th January 2019 01:37 AM | Last Updated : 28th January 2019 01:37 AM | அ+அ அ- |

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வட்டார ஒருங்கிணைப்பாளர் கி. பாலசண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றாகவும் தனித்தனியாகவும் பல்வேறு போராட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்கள் பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் மாலை நேரஆர்ப்பாட்டமாகவோ அல்லது அரசு விடுமுறை நாள்களில் பேரணி மனிதச் சங்கிலி கோரிக்கை மாநாடு மற்றும் உண்ணாவிரதப் போராட்டமாகவே நடைபெற்று வந்தன. அப்போதெல்லாம் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொது சிந்தனையாளர்களும் தமிழக அரசும் எண்ணவில்லை.
முறையான போராட்ட அறிவிப்பு விடுத்த பிறகும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த காலக் கட்டத்திலும் இப்பிரச்னையைத் தீர்க்க அரசு முன்வரவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேறுவழியின்றி அறவழியில் வேலை நிறுத்தம், அலுவலக முற்றுகை என அறப் போராட்டங்களை நடத்தும் நிலைமைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் செலவு செய்து அரசு பணத்தில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அவ்விளம்பரத்தில் இப்போராட்டம் ஊதிய உயர்வுக்காக மட்டுமே என்று பொதுமக்களிடம் தவறானபிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்பது அவ்விளம்பரத்தில் இல்லை.
ஜாக்டோ-ஜியோவின் 9 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகள் பணம் தொடர்பானது அல்ல. இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் 30 பேர் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பணியிடை நீக்க உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போராட்டத்துக்கு சுமுகமாக தீர்வு காண்பதை விடுத்து இதுபோன்ற அடக்கு முறைகளால் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது.
பொறுப்பாளர்களை வீடு புகுந்து கைது செய்ததில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பெரும் மன உளைச்சலிலும் அதிருப்தியிலும் உள்ளனர். இந்த நடவடிக்கை போராட்டத்தை மேலும் தூண்டியுள்ளது. எனவே, ஜாக்டோ-ஜியோ மாநில அமைப்பின் முடிவின்படி திங்கள்கிழமை (ஜன.28) முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அறப்போராட்டம் தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை கைவிட வேண்டும்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட முன்வர வேண்டும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே அனுமதி வழங்கலாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இதுவரை, டெல்டா மாவட்டங்களில் 1,192 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 3,50,397
மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மாணவ, மாணவிகளின்
படிப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜாக்டோ-ஜியோ போராட்டக் குழுவினர் போராட்டத்தைக் கைவிட முன் வர வேண்டும். ஜாக்டோ -ஜியோ அமைப்பினரின் கோரிக்கைளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
அரசுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
நாகப்பட்டினம், ஜன. 27 : ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டம் குறித்து தமிழக அரசு சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கோரியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார்1.5 லட்சம் பேர் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுத்து வரும் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்கள் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசுத் தேர்வுகள் நெருங்கும் நிலையில் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு சில சமூக அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் வலுப் பெறும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையையும், மாணவர்களின் கல்வித் தரத்தையும் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து ஏற்கவேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.