திருக்களாச்சேரியில் 3 வீடுகள் தீக்கிரை: பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவி
By DIN | Published On : 01st July 2019 07:12 AM | Last Updated : 01st July 2019 07:12 AM | அ+அ அ- |

பொறையாறு அருகேயுள்ள திருக்களாச்சேரியில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
திருக்களாச்சேரி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெகநாதன், குமார், முனியம்மாள். இவர்களது குடிசை வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. இந்த வீடுகளின் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் 3 குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதில் மூன்று வீடுகளும் எரிந்து நாசமாகின. வீட்டுக்குள் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், வட்டாட்சியர் சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருள்கள் வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, கிராம உதவியாளர் அசோக்குமார் உள்ளிட்டோரும் வட்டாட்சியருடன் வந்திருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ராசையன், வட்டக்குழு உறுப்பினர் காபிரியேல், செல்வராசு ஆகியோரும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.