வேதாரண்யத்தில் இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது: படகு பறிமுதல்
By DIN | Published On : 01st July 2019 01:54 AM | Last Updated : 01st July 2019 01:54 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், வேதாரண்யத்துக்கு கடல் வழியே சட்ட விரோதமாக படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் படகுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமப் பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வந்ததாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் மேலும் 2 பேர் படகு மூலம் சட்ட விரோதமாக வேதாரண்யம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, வேதாரண்யம் சன்னிதிக் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இலங்கைப் படகை கைப்பற்றிய போலீஸார், கடற்கரைப் பகுதியில் பதுங்கி இருந்த மற்ற இருவரையும் பிடித்தனர். பின்னர், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இலங்கை திரிகோணமலை, தக்வாநகர் மூதூர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரசூப் மகன் முகமது நிகாஸ் (23), கிளிநொச்சி, தருமபுரம் கல்லாறு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் மகன் வசீகரன் (20), மூதூர் ரிபாத்வீதி நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது நிஸார் மகன் முகமது ரஜீஸ் (33) என்பது தெரியவந்தது.
இவர்கள் மூவரும் உரிய ஆவணங்களின்றி இந்திய கடல் பகுதிக்கு வந்ததும், இங்கிருந்து மருந்துப் பொருள்கள், துணிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், இதேபோல் ஏற்கெனவே இவர்கள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, படகு மற்றும் அதிலிருந்த 20 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன், இலங்கை பணம் மற்றும் 4 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீகாந்த், கலிதீர்த்தான் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.