சுடச்சுட

  

  தரைக்கடை வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

  By DIN  |   Published on : 02nd July 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தரைக்கடை வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
  மயிலாடுதுறையில் நகராட்சி சார்பில் ஜூன் 18-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, வண்டிக்காரத் தெருவில் தரைக்கடை வியாபாரிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவலர் ஒருவர், தராசு எடைக்கல்லால் தாக்கப்பட்டார். மேலும், தரைக்கடை வியாபாரிகளும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 
  இந்நிலையில், தரைக்கடை வியாபாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.  அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. சீனிவாசன், எஸ். துரைராஜ், ஜீவானந்தம், ஏ.வி. சிங்காரவேலன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தரைக்கடை வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோரும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  தள்ளுமுள்ளு: முன்னதாக, பேரணியாக வந்த அவர்கள், போலீஸார் அமைத்திருந்த தடுப்பை மீறி, நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இப்போராட்டத்தில், தரைக்கடை வியாபாரிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,  சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஏற்கெனவே வியாபாரம் செய்த இடத்தில் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரத்தைத் தொடர அனுமதிக்க வலியுறுத்தியும், வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
  இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை அழைத்து நகராட்சி மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பிரச்னை தொடர்பாக நகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். 
  இப்போராட்டத்தையொட்டி, மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai