சீர்காழி திருத்தோணிபுரம் வாய்க்காலில் பாலம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th July 2019 07:36 AM | Last Updated : 05th July 2019 07:36 AM | அ+அ அ- |

சீர்காழியில் உள்ள திருத்தோணிபுரம் வாய்க்காலின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலையம் பக்கவாட்டில் திருத்தோணிபுரம் பாசன வாய்க்கால் செல்கிறது. அருகில் உள்ள குடியிருப்புகளால் இந்த வாய்க்காலின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது வாய்க்கால் குறுகியதுடன், அப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்காலில் விடப்படுகின்றன. இதனால், தற்போது திருதோணிப்புரம் பாசனக் வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக
மாறியுள்ளது.
சுற்றுவட்டார கிராமப் பகுதிகளிலிருந்து சீர்காழியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தங்கள் பள்ளிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியின்றி செல்ல, இந்த திருத்தோணிபுரம் வாய்க்காலைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக, பேருந்து நிலைய பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதியை சிறிய அளவில் இடித்து பாதை ஏற்படுத்தியுள்ளனர். நாளடைவில் இந்தப் பாதையை பேருந்து பயணிகள், பொதுமக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
பாசன வாய்க்காலை கடந்து செல்ல எந்தவித பாதையும் இல்லாத நிலையில், சாக்கடை கழிவுநீரில் கற்களைபோட்டு, அதன்வழியாக நடந்துசென்றுவருகின்றனர். அவ்வாறு செல்லும்போது சில நேரங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் வழுக்கி விழும் நிலையும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பொதுமக்கள் கழிவுநீர் பாதையைக் கடந்து செல்ல வசதியாக, தென்னைமரத்துண்டுகளை குறுக்கே பாலம் போல் அமைத்திருந்தனர். அந்த மரத்துண்டுகள் தற்போது மக்கிவிட்டன. இதனால், கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே ஆங்காங்கே கற்களை போட்டு அதன் மீது நடந்து செல்கின்றனர்.
ஆகையால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலன் கருதி திருத்தோணிபுரம் வாய்க்காலின் குறுக்கே சிறிய பாலம் அமைத்து தர பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.