தேரழுந்தூரில் கம்பர் விழா
By DIN | Published On : 08th July 2019 09:07 AM | Last Updated : 08th July 2019 09:07 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை கம்பர் விழா நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை பிரேமாவின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அ. கதிரேசன் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் க. ராஜேந்திரன் தொடக்க உரையாற்றினார். மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் நடத்திய பட்டிமன்ற நிகழ்வில் ராமனின் புகழ் உயர்ந்து நிற்பது கிட்கிந்தை காண்டத்தின் செயல்களில் எனும் தலைப்பில் பேராசிரியர் கிரு. பாண்டியன், முனைவர் மணி. சண்முகம், பேராசிரியர் சு. முத்துலட்சுமி ஆகியோரும், யுத்த காண்ட நிகழ்வுகளினால் எனும் தலைப்பில் இரா. செல்வகுமார், கவிஞர் முத்து. நடராஜன், பேராசிரியர் சந்தானலட்சுமி ஆகியோர் உரையாற்றினர். நடுவராக முனைவர் சிவச்சந்திரன் பணியாற்றினார். இறுதியில் ஜெ. பூர்ணிமா நன்றிகூறினார்.
சனிக்கிழமை மாரி. பன்னீர்செல்வத்தின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. இரா. மஞ்சுபார்கவி வரவேற்றார். சீர்காழி கம்பர் கழகம் நடத்திய விவாதமேடை நிகழ்வில் கம்பராமாயணத்தில் வெற்றிபெறுவது வரமே எனும் தலைப்பில் குடவாசல். ராமமூர்த்தியும், தவமே எனும் தலைப்பில் முனைவர் பனசை. மூர்த்தி ஆகியோர் பேசினர். இதற்கு நடுவராக த. அகரமுதல்வன் பணியாற்றினார். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் வேளாண் விஞ்ஞானி நா. பாஷ்யம், மருத்துவர் கிரஹாம்டேனியல், பாடகர் தாஜ்தீன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேரழுந்தூர் கம்பர் கழகத் தலைவர் முத்து. ஜானகிராமன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.